Last Updated : 28 Jul, 2023 05:00 AM

 

Published : 28 Jul 2023 05:00 AM
Last Updated : 28 Jul 2023 05:00 AM

காலமும் கொண்டாடும் கலாம் | 8-ஆம் ஆண்டு நினைவு தினம்

சிந்திக்கலாம், முயற்சிக்கலாம், சாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்ட அனைவருக்கும் நம்பிக்கை நாயகனாக விளங்கியவர்; நாட்டின் மிக உயர்ந்த பதவியில் பொறுப்பு வகித்த போதிலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மத்தியில் மனம் திறந்து உரையாடிய சிறப்புக்குரியவர்; தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி கற்று, ஏவுகணை தொழில்நுட்பத்தில் உலகம் வியக்கும் பல சாதனைகளைப் புரிந்து ‘இந்திய ஏவுகணைகளின் தந்தை’ என்று பாராட்டப்பெற்றவர்; இப்படியான பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் தான் நம் தமிழ்நாட்டின் தென்கோடியான இராமேஸ்வரத்தில் பிறந்து, இந்திய திருநாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த பெருமகனார் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

நம் இந்திய தேசத்தின் நவீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தனது அறிவாற்றலை முழுமையாக அர்ப்பணித்த அப்துல் கலாம், நாளைய தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கும் இளைய தலைமுறை விரும்பிக் கொண்டாடும் அறிவியல் ஆளுமையாக இருந்தார். அதனால் தான் அவர் பள்ளிகளில் பேசும்போதெல்லாம் தனது அறிவியல் கருத்துக்களை யெல்லாம் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளாக மாணவர் மனங்களில் விதைத்தார்.

‘கனவு காணுங்கள்; ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல; உன்னைத் தூங்க விடாமல் செய்வதே கனவு’ என்று அப்துல் கலாம் சொன்ன வார்த்தைகள், பிஞ்சு மனங்களில் அப்படியே கல்வெட்டாகப் பதிந்துபோனது. ‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்ற கலாமின் சொற்கள், இளைஞர்கள் மனதில் உறுதியான தன்னம்பிக்கையை உருவாக்கியது. ‘நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவதில்லை’ என்று தனிமனிதனின் சுயமரியாதையையும் அறிவின் தெளிவையும் சொல்லி ஊக்கமூட்டினார். அதனாலேயே தான் அப்துல் கலாம் இந்திய மண்ணில் பிறந்த அனைவராலும் போற்றிக் கொண்டாடப்பட்டார்.

தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று ஜைனுலாபுதீன் - ஆஷியம்மா தம்பதியினரின் 5-ஆவது மகனாகப் பிறந்தார் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்கிற ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். மீனவ தொழில் புரிந்த குடும்பத்தில் பிறந்த கலாம், சிறுவயதில் வறுமையின் பின்னணியில் வளர்ந்தவர். பள்ளி மாணவனாக இருக்கும்போதே குடும்ப வருமானத்திற்காகத் தினமும் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியினைச் செய்தார். பள்ளியில் சராசரி மாணவனாக மதிப்பெண்களைப் பெற்ற போதிலும், கற்றுக்கொள்வதில் ஈடுபாடும், கணக்குப் பாடத்தில் ஆர்வமும் உடையவராக இருந்தார்.

இராமேசுவரத்திலுள்ள தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்ற கலாம், திருச்சியிலுள்ள தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து, இயற்பியலில் பட்டம் பெற்றார். பிறகு, சென்னையிலுள்ள எம்.ஐ.டி.யில் 1955-இல், விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து, முதுகலை பட்டம் பெற்றார். சிறுவயதில் விமானியாக வேண்டுமென்கிற ஆசையும் கலாமிடம் இருந்தது. அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

கலாம் பல புகழ்மிக்க முனைவர் பட்டங்கள் பெற்றிருந்தாலும் முறையான படிப்பை, எம்.ஐ.டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார். தனது படிப்பினை முடித்த பிறகு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) விண்வெளி பொறியாளராகப் பணியாற்றத் தொடங்கினார் கலாம். 1960-ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் விஞ்ஞானியாக ஆராய்ச்சியை தொடங்கிய அப்துல் கலாமின் பயணமானது, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடமான இஸ்ரோ வரைக்கும் தொடர்ந்தது.

வளர்ந்துவரும் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா திகழ வேண்டுமென்று விரும்பினார் கலாம். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகுந்த கவனமும் ஈடுபாடும் காட்டினார். நாட்டின் பெருமைமிகு அறிவியல் விஞ்ஞானியாக அறியப்பட்டாலும், கற்றுக்கொள்வதிலும் தான் கற்றதைப் பிறருக்கு கற்றுக்கொடுப்பதிலும் எப்போதும் அக்கறை காட்டினார் கலாம்.

பாட்னாவின் அஸ்தினா பூரிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களின் வருகைப் பேராசிரியராகவும், திருவனந்தபுரத்திலுள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தராகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே.எஸ்.எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை / வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இந்தியாவில் முதல் அணு ஆயுத சோதனை 1974-ஆம் ஆண்டில் நடந்த பிறகு, 1998-இல் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி பொக்ரான் - II அணு ஆயுத பரிசோதனை நடைபெற்றது. இச்சோதனையின்போது, நிறுவனம், தொழில்நுட்பம் மற்றும் அரசியல் ரீதியாக கலாம் மிக முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பாதுகாப்புத் துறையின் ஆய்வுகளில் முதலில் வெளிநாட்டு கருவிகளே பெருமளவில் பயன்படுத்தப் பட்டு வந்தன. அவற்றை வேண்டாமென ஒதுக்கி விட்டு, முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கருவிகள் மூலம் ஆய்வு பணிகளைச் செய்ய வைத்தார் கலாம்.

அப்துல் கலாம் திட்ட இயக்குநராக இருந்த காலத்தில் தான் திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டு, இந்திய ராணுவத்தின் செயல்பாட்டிற்குப் பேருதவியாக அமைந்தன. இந்தியாவிற்காக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கலாம் உருவாக்கியபோது அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் கலாமின் அறிவியல் செயல்பாட்டை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை கலாமின் கண்டுபிடிப்புகளில் சிறப்பு வாய்ந்தவையாகும்.

அவற்றிற்கு ‘கலாம் ஸ்டெண்டு’ என்றே பெயர் சூட்டப்பட்டது. 2002-ஆம் ஆண்டில் நம் நாட்டின் முக்கியக் கட்சிகளின் பேராதரவோடு, 11-ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரை குடியரசுத் தலைவராக இருப்பவர்கள் இப்படியாகத்தான் இருக்க வேண்டுமென்று இருந்த மரபுகளை மாற்றி, தான் பதவியேற்ற நாள் முதலே புதிய செயல்பாடுகளை முன்னெடுத்தார் கலாம். 2002 சூலை 22 முதல், 2007 சூலை 25 வரை நாட்டின் குடியரசுத் தலைவராகச் சிறப்பான முறையில் பணியாற்றினார். ‘மக்கள் ஜானதிபதி’ என்று இந்திய மக்களால் பெரிதும் பாராட்டப்பெற்றார் கலாம்.

ஒருமுறை புதுடில்லியிலுள்ள காந்தி சமாதிக்குச் சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களைக் குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன்” என்ற குறிப்பினை எழுதினார். அதன்படி தனது ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவ-மாணவிகளிடம் தொடர்ந்து பேசிவந்தார். சிறுவயதிலிருந்தே கவிதைகளைப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த கலாம், பின்னாளில் கவிதைகளும் எழுதினார். கலாம் எழுதிய கவிதை வரிகள் ஒவ்வொன்றும் வாசிப்பவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளி விளக்குகளாக மிளிர்ந்தன.

கலாமின் கவிதைகள் ‘எனது பயணம்’ எனும் நூலாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. திருக்குறளின் மீது ஆழ்ந்த பற்றினைக் கொண்டிருந்தகலாம், ‘என் வாழ்வில் திருக்குறள்’ எனும் நூலினையும் எழுதினார். தனது வாழ்க்கை வரலாற்றினை ‘அக்னிச் சிறகுகள்’ எனும் நூலாகவும் எழுதி, அந்நூல் தேசமெங்கும் வரவேற்பைப் பெற்றது. கலாம் மிகுந்த எளிமையும், குழந்தைகள் மேல் பாசமும் கொண்ட மனிதராக அனைவராலும நேசிக்கப்பட்டார்.

குழந்தைகள் மத்தியில் எப்போதுமே கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசினார். குழந்தைகள் மனங்களில் இருந்த அவநம்பிக்கையை அகற்றி, புத்துணர்வையும் புதிய நம்பிக்கையையும் ஊட்டினார். குடியரசுத் தலைவராக இருந்தபோது, தன்னைச் சந்திக்க வந்த அரசியல் தலைவர்களிடம் எல்லாம், ‘‘நம் தேசத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’ என்று சொன்னவர் கலாம். கலாம், பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியின் தான் மட்டுமே பேசிக்கொண்டிருக்க வேண்டுமென நினைக்கவில்லை. அவர்களும் பேச வேண்டும்; கேள்விகள் கேட்டு தெளிவுபெற வேண்டுமென்று விரும்பினார்.

ஒருமுறை ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு மாணவி, ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கலாமிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவுமில்லை’’ என்று பதில் சொல்லி, மாணவ-மாணவிகளின் மனங்களில் அறிவியல் சிந்தனையைப் படரவிட்டார். கலாம், ‘இந்தியா 2020’ எனும் நூலினை எழுதினார். அந்நூலில், ‘அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா, 2020-ஆம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும்’ என்று எழுதி, இந்திய இளைஞர்களிடம் உற்சாகத்தை உண்டாக்கினார். கலாமுக்கு இசைக்கருவி வாசிப்பதில் ஆர்வமுண்டு.

தன்னிடம் இருந்த ஒரு பழமையான வீணையை எப்போதாவது நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து, மனமகிழ்வு கொள்வார். கலாம் மிகுந்த இசை ஞானம் உடையவர். தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார். எப்போதுமே கலாம் தன்னைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். ஒரு நாளும் அவர் சோம்பலாக இருந்ததில்லை. ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம்கூட தயங்காமல் உழைத்தார் கலாம். கலாமின் சிறப்பான அறிவியல் ஆக்கங்களுக்காக உலகம் முழுவதுமுள்ள 40 பல்கலைக்கழகங்கள் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காகவும், அரசின் விஞ்ஞான ஆலோசகராகப் பணியாற்றியமைக்காகவும் 1981-ஆம் ஆண்டில் ‘பத்ம பூஷண்’ விருதும், 1990-ஆம் ஆண்டில் ‘பத்ம விபூஷண்’ விருதும் இந்திய அரசு வழங்கிக் கவுரவித்தது. பாரத ரத்னா (1997), தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது (1997), வீர சாவர்க்கர்விருது (1998), ராமானுஜன் விருது (2000) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விருதுகள் கலாமின் புகழ் மகுடத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் வழங்கப்பட்டன.

‘வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம்; அதை நழுவ விடாதீர்கள். வாழ்க்கை ஒரு கடமை; அதை நிறைவேற்றுங்கள். வாழ்க்கை ஒரு லட்சியம்; அதை சாதியுங்கள். வாழ்க்கை ஒரு சோகம்; அதை தாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு போராட்டம்; வென்று காட்டுங்கள். வாழ்க்கை ஒரு பயணம்; அதை நடத்தி முடியுங்கள்’ என்று தனது கூட்டங்களிலெல்லாம் பேசி வந்தார் கலாம். 2015-ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று ஷில்லாங்கிலுள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் விழாவொன்றில் பேசிக்கொண்டிருந்த கலாம், மேடையிலேயே மயங்கி விழுந்து உயிர் நீத்தார்.

அப்துல் கலாமிம் மறைவு தேசமெங்கிலும் எதிரொலித்தது. ஒரு மகத்தான மாமனிதரை இந்த தேசம் இழந்து விட்ட சோகம் அனைவர் மனதிலும் குடிகொண்டது. ராமேஸ்வரம் மசூதி தெருவிலுள்ள அப்துல் கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், மிஷன் ஆஃப் லைப் காலேரி (Mission of Life Gallery) என்ற பெயரில், அப்துல் கலாம் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் எழுதிய நூல்கள் அனைத்தும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் தீவிலுள்ள பேக்கரும்பு என்னுமிடத்தில் அப்துல் கலாம் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் 20 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ‘அப்துல் கலாம் தேசிய நினைவகம்’, டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை பிரதிபலிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உள்ளங்களில், இளைஞர்களின் எண்ணங்களில், இந்திய மக்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், என்றென்றும் காலமும் கொண்டாடும் மகத்தான அறிவியல் மாமேதை என்பதில் இருவேறு கருத்திற்கு இடமேயில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x