Last Updated : 31 Jul, 2014 12:00 AM

 

Published : 31 Jul 2014 12:00 AM
Last Updated : 31 Jul 2014 12:00 AM

பொய்யூர் டைம்ஸ்: கணித வாரம்- தமிழக தலைவர்கள் எதிர்ப்பு

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அடுத்தவாரம் கொண்டாட எதுவும் இல்லை என்பதால் கணித வாரமாகக் கொண்டாட வேண்டும் என்று எல்லா பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இதற்கு வழக்கம்போல தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மு. கருணாநிதி (திமுக தலைவர்)

சட்டப் பேரவை பொதுத் தேர்தலிலும் அதற்குப் பிறகு உள்ளாட்சி மன்ற பொதுத் தேர்தலிலும் அதற்கும் பிறகு மக்களவை பொதுத் தேர்தலிலும் மானமுள்ள தமிழர்கள் ஆட்சியிழந்து, அதிகாரமிழந்து, அனைவராலும் பாராட்டப்படுகிற வாய்ப்பையும் இழந்து சோகத்தில் இருக்கும் இந்த நேரத்தில் கணித வாரம் அவசியம்தானா? இந்த கேள்வியை நான் கேட்கவில்லை, தமிழினம் கேட்கிறது.

கணக்கு கேட்டதை சகிக்க முடியாமல் ஒருவரைக் கழகத்தைவிட்டே நீக்கிய காலத்திலிருந்தே கஷ்டதிசை ஆரம்பித்ததை, “தம்பி உன்னால்தான் மறக்க முடியுமா?” என்று நான் எழுதிய 72 பக்க அறிக்கையை மீண்டும் வெளியிட்டால்தான் இந்த ஆட்சியாளர்கள் அடங்குவார்கள் என்றால் அதை மீண்டும் அனுப்பத் தயாராக இருக்கிறேன். தமிழினத்தின் மீது குறிப்பாக, மாணவர்கள் மீது கணக்கு திணிக்கப்படுவதை கழகம் இனியும் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

ஜெயலலிதா (அதிமுக பொதுச்செயலாளர்)

கணக்கு வழக்கில்லாமல் என் மீது வழக்குகளைத் தொடுத்தவர்கள் இன்று மூலையில் முடங்கிக் கிடந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை விட்டால் யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் காரணமாகத்தான் தமிழ்நாட்டு நிதியை எல்லாம் கணக்கு பார்க்காமல் அம்மா உணவகம், அம்மா டிபனகம், அம்மா காபியகம் தொடங்க செலவிட்டு வருகிறேன்.

இந்த நேரத்தில் மத்திய அரசு கணித வாரம் கொண்டாடுவது எதற்கு? கணித பாடத்தில் நான் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியிருந்தாலும் 1977 வரை பெரும்பாலான தமிழர்கள் எஸ்.எஸ்.எல்.சி.யையே தாண்ட முடியாதபடிக்கு தேர்வில் தோல்வியடையக் காரணமாக இருந்தது கணிதம்தான் என்பதை மத்திய ஆட்சியாளர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழர்களுக்கு வேப்பங்காயாக கசக்கும் கணக்குக்கு ஒரு வாரத்தை வீணாக்குவதை நிறுத்துவதுடன் இனி மாணவர்களுக்கு கணக்குப் பாடமே கிடையாது என்ற நல்ல அறிவிப்பை பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என்று அவருக்குக் கடிதம் எழுத முடிவு செய்திருக்கிறேன்.

ச. ராமதாஸ் (பாமக நிறுவனர்)

முதலில் ஹிந்தி படி என்றார்கள், அப்புறம் சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுங்கள் என்றார்கள். இப்போதோ கணக்கு வாரம் என்கிறார்கள். தமிழினத்தை நிம்மதியாக வாழவிடமாட்டேன் என்ற முடிவை மத்திய அரசு எடுத்துவிட்டதா என்று தைலாபுரத்தில் என்னிடம் கேட்கிறார்கள்.

பாட்டாளி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் படிப்பைத் தொடர முடியாமலும் தொடர்ந்ததை நிறுத்த முடியாமலும் தவிப்பதற்குக் காரணமே இந்த கணிதம்தான். கணிதம் மட்டுமல்ல அறிவியல், சமூக அறிவியல், புவியியல், ஆங்கிலம் என்று எல்லா பாடங்களையும் ஒழித்துவிட வேண்டும். கம்பனும் ஒட்டகூத்தனும் கணக்கும் புவியியலும் சமூக அறிவியலும் படித்தா புலவர்கள் ஆனார்கள்? ராஜராஜ சோழன் காலத்தில் தமிழர்கள் அல்ஜீப்ரா, கால்குலஸ், டிரிகினாமெட்ரியெல்லாம் படித்தார்களா? தமிழர்களின் படிப்பில் மண்ணை அள்ளிப்போட இந்தப் பாடங்கள் எல்லாம் அவசியமா? மத்திய அரசு உடனடியாக கணக்கு வாரத்தை ரத்து செய்யாவிட்டால் நானே அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்குவேன்.

மோடி அரசு எதைக் கொண்டுவந்தாலும் அது மக்களுடைய நன்மைக்காக இருக்காது, குறிப்பாக தமிழர்களுக்குப் பிடிக்காது என்பதால் இந்த உணர்வில் தாங்களும் பங்கேற்பதாக ம.தி.மு.க., தே.மு.தி.க. விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற கட்சிகளும் அறிக்கை அளித்துள்ளன.

கணிதத்துக்கு சிறப்பு வாரம் கொண்டாடுவது என்ற பிரித்தாளும் கொள்கையை மத்திய அரசு உடனே கைவிடாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஈடுபடுவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார்.

“கணிதமேதை ராமானுஜம் திரைப்படமே இந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் 3%-க்கும் குறைவாக இருக்கிறவர்களின் செல்வாக்கை வளர்க்கத்தான் என்ற சந்தேகம் தமிழர்களுக்கு இருக்கும் இந்த நேரத்தில் கணித வாரம் என்ற சுற்றறிக்கை மூலம் பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதை சுட்டிக்காட்டி எச்சரிக்க விரும்புகிறோம். கணிதம், அறிவியல், சமூகவியல் அனைத்துமே ஒரு சாராருக்கு மட்டுமே எளிதாகப் படிக்க வருவதால் இந்த சமூக அநீதியைக் கண்டித்து கணக்கு புத்தகங்கள் மீது தார் பூசும் கிளர்ச்சியை அடுத்துத் தொடங்கப் போகிறோம்” என்று பல தமிழ் உணர்வுள்ள பகுத்தறிவு இயக்கங்களும் அறிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x