Published : 27 Aug 2025 12:58 PM
Last Updated : 27 Aug 2025 12:58 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.28 - செப்.3

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சந்திரன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும்.

பெண்களுக்கு பிரச்சனைகள் சரியாகும். கலைத்துறையினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். அரசியல்துறையினருக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது நல்லது.

அஸ்வினி: இந்த வாரம் தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது.

பரணி: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: ரிஷப ராசியினரே இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் எதையும் செய்து முடிக்கும் மனதைரியம் ஏற்படும். உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். தொழில் ஸ்தானாதிபதி சனியின் ஆட்சி சாரத்தால் எதை பற்றியும் கவலைப்படாமல் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும். குடும்ப ஸ்தானத்தை குரு அலங்கரிப்பது நல்ல அம்சமாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள்.

கலைத்துறையினருக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தேடி வரும். அரசியல்துறையினருக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உறவினர்கள் வகையில் தவிர்க்க முடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டு சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

ரோகிணி: இந்த வாரம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் உண்டாகும். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்து நின்று வெற்றி கொள்வீர்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண் விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சில சமயம் விரக்தி ஏற்படலாம். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

பரிகாரம்: மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு, சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், கேது - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: மிதுன ராசியினரே இந்த வாரம் ராசிநாதன் புதன் சஞ்சாரம் உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக் கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். தொழில் ஸ்தானாதிபதி குரு ராசியை அலங்கரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும்.

கலைத்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அரசியல்துறையினருக்கு உங்கள் புத்திக் கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

திருவாதிரை: இந்த வாரம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து வெற்றி பெறுவீர்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இந்த வார கிரகங்களின் நிலை:

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x