Last Updated : 05 Mar, 2025 04:41 PM

 

Published : 05 Mar 2025 04:41 PM
Last Updated : 05 Mar 2025 04:41 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மார்ச் 6 - 12

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு என வலம் வருகிறார்கள்

பலன்கள்: இந்த வாரம் சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதையும் மனோ தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு அவர்களுக்கு கீழே உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். உறவினர்களுடன் சுமூக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.

கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது. அரசியல்வாதிகளின் உறவு பலப்படும். மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

அஸ்வினி: இந்த வாரம் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதை துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.

பரணி: இந்த வாரம் பிள்ளைகளின் மீது கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் செலவுகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். ஆடம்பர செலவுகள் வேண்டாம். இளைய சகோதரரின் மூலம் லாபம் கிடைக்கும். சிறப்பான சுகங்களை அனுபவிக்க போகும் காலமிது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சினைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - பஞ்சம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சனி - லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு என வலம் வருகிறார்கள்

பலன்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்கியம் ஏற்படும். மூன்றாம் இடத்தை சூரியன் பார்க்கிறார். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும்.

எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும். பெண்களுக்கு எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக்குறையை சந்திக்கலாம். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற மிகவும் கவனமாக பாடங்களை படிப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சில மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது போட வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலனைக் கவனிக்கப்பட வேண்டிய காலமிது.

ரோகினி: இந்த வாரம் வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மிருகசிரீஷம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் உலக வாழ்க்கை, யோக வாழ்க்கை இரண்டிலும் சரி சமமான எண்ணங்கள் உண்டாகும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்சினைகளின்றி சுமூகமாக நடைபெறும். இளைய சகோதரர் குடும்ப பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு லாபங்களைச் சேர்ப்பார்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்க கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும்.

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் (வ) - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சனி - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு- அயன சயன போக ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள்

பலன்கள்: இந்த வாரம் மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் கடும் முயற்சிக்குப் பின்னர் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோதைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.

கலைத்துறையினருக்கு பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு நிலவி வந்த பிரச்சினைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன்னர் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். மாணவர்களுக்கு அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும்.

மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும். உத்தியோகம் பார்ப்பவர்கள் பிந்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர்.

திருவாதிரை: இந்த வாரம் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் லாபம் ஈட்டுவீர்கள். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அழகுநிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ் வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு சிறப்பான வாரம்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வணங்க முன்ஜென்ம பாவம் தீரும். குடும்ப கஷ்டம் தீரும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x