Last Updated : 12 Apr, 2025 01:28 PM

 

Published : 12 Apr 2025 01:28 PM
Last Updated : 12 Apr 2025 01:28 PM

மீனம் ராசிக்கான விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - முன்னேற்றம் உண்டு!

மீனம்: ஆறாவது அறிவை அடிக்கடி பயன்படுத்தும் நீங்கள், நடுநிலை தவறாது செயல்படுபவர்கள். உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் சொந்த வீடு வாங்கும் கனவு பலிக்கும். பொருளாதாரநிலை திருப்திகரமாக அமையும். முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள்.

மே 14-ம் தேதி முதல் குரு பகவான் 4-ல் நின்று பலன் தரப்போவதால் எதிலும் உணர்ச்சி வயப்படாமல் முடிவெடுப்பது அவசியம். சேமிப்புகள் கரையும். குடும்பத்தில் சச்சரவுகள் எழாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். புகுந்த வீட்டு உறவுகளிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். பிறந்த வீட்டு பெருமையை எப்போதும் கூறிக் கொண்டிருக்காதீர்கள். குருவின் பார்வை பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் விருப் பத்தை நிறைவேற்றுவீர்கள். மகனின் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதுப் புது எண்ணங் கள் மனதில் தோன்றும். மகனின் கெட்டப் பழக்க வழக்கங்களை கண்டித்து அவர்களை மீட்பீர்கள்.

அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானப் பிரச்சினை வந்து போகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மகளுக்கு தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணத்தை இனி வெகு விமரிசையாக நடத்தி முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். அந்நிய நண்பர்களால் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சிலருக்கு புது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மே 18-ம் தேதி நடக்கும் ராகு - கேதுப் பெயர்ச்சியும் உங்களுக்குச் சாதகமே. தோற்றப் பொலிவு கூடும். வர வேண்டிய பணம் தாமதம் இல்லாமல் வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனைவிக்கு கால்வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகம் வேண்டாம். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். ஆறுதல் தேடுவதாக நினைத்துக் கொண்டு குடும்ப ரகசியங்களை வெளி மனிதர்களிடம் கூறிக் கொண்டிருக்காதீர்கள். எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.

இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தினரால் அங்கீகாரம் கிடைக்கும். கணவர் அன்பாக நடந்து கொள்வார். சின்னச் சின்ன பனிப்போர் வந்து போகத்தான் செய்யும். கவலையை விடுங்கள். அடுப்படி, அலமாரிகளில் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய தொழில் முயற்சியில் இறங்கவும். தையல், சமையல், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு என்று தொழில் முனைவோராக வலம் வருவீர்கள்.

கன்னிப் பெண்களுக்கு தடைகள் உடைபடும். முகப்பரு, வயிற்றுவலி நீங்கும். முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனையை கேட்டு செயல்படுங்கள். கல்யாணம் கூடி வரும். விரும்பிய மணமகன் அமைவார். மாணவ மாணவி களுக்கு உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் ஆண்டின் பிற்பகுதியில் அதீத முன்னேற்றம் உண்டாகும். தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கவும். பெரிய முதலைப் போட்டு மாட்டிக் கொள்ளாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஹோட்டல், இரும்பு, எலட்ரானிக்ஸ் சாதனங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்து போங்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். எனினும் வேலைச் சுமைகள் அதிகரித்துக் கொண்டே போகும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். மேலதிகாரி உங்களுக்கு இணக்கமாக இருப்பார். எப்போதும் யாரையும் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். புறம் பேசுவதையும் நிறுத்திக் கொள்ளவும். நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடு செல்லக் கூடும். அதுவும் நன்மைக்கே.

கலைத்துறையினருக்கு தள்ளிப் போய்க் கொண்டிருந்த வாய்ப்புகள் கதவை தட்டும். சோம்பலை தவிர்த்து சுறுசுறுப்பாவீர்கள். யாரையும் விமர்சித்து பேசாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, தடைகளைத் தாண்டி உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

பரிகாரம்: திருவண்ணாமலை அண்ணாமலையாரை வணங்குங்கள். கிரிவலம் வாருங்கள். உடல் ஊனமுற்றோருக்கு முடிந்த வரை உதவுங்கள். பலாமரக் கன்று நட்டு பராமரியுங்கள். விரும்பியதெல்லாம் நடக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x