Last Updated : 12 Apr, 2025 12:40 PM

 

Published : 12 Apr 2025 12:40 PM
Last Updated : 12 Apr 2025 12:40 PM

மகரம் ராசிக்கான விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - சாமர்த்தியம் கூடும்!

மகரம்: சொன்ன சொல் தவறாத நீங்கள், தவறு செய்தவர்களுக்கு ஒரு போதும் தயவு தாட்சண்யம் காட்டாதவர்கள். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் நேர்மறை எண்ணங்களால் சாதிப்பீர்கள். புதிய பொறுப்புகள், அதிகாரங்கள் தேடி வரும். எனினும், மே மாதத்துக்குப் பிறகு குரு 6-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். ஆகவே, எல்லா விஷயங்களிலும் நிதானம் அவசியம்.

கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்திருந்த தம்பதி, இனி ஒன்று சேர்வீர்கள். தம்பதிக்குள் பிரச்சினை ஏற்பட்டால், அதில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். பிள்ளைகளுடன் வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். அவர்களின் விருப்பங்களைக் கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றவும். அவர்கள் விரும்பிய படிப்பில் அவர்களை சேர்ப்பதற்கு முயற்சிக்கவும்.

பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் அடிக்கடி வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். விரயச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் இனி குதூகலம் தான். குழந்தை வரம் வேண்டியவர்களுக்கு, இனி வாரிசு உருவாகும். நீங்கள் எதிர்பார்த்தபடி உங்கள் வீட்டு பெண்களுக்கு நல்ல துணை அமையும். பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி, முடியாமல் இருந்த திருமணம் கைகூடும். சொந்த பந்தங்கள் வியக்கும்படி திருமணத்தை முடிப்பீர்கள். மகனுக்கும் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கார் இருந்தும் பெட்ரோல் போட பணமில்லை என்ற நிலை மாறும். அடிக்கடி மருத்துவச் செலவால் அவதிப்பட்ட நிலை மாறும். இனி ஆரோக்கியம் அடைவீர்கள். தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. யோகா, தியானம் என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். சகோதரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவி செய்யவும். பழைய வாகனத்தை மாற்றும் யோசனையிலும் இருப்பீர்கள். அடுத்தவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு நாளும் ஏதேனும் பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் பக்குவத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். சொந்த ஊர் விஷயங்களில் அதிகமாக தலையிட வேண்டாம். எதற்கும் சண்டை போடுவதால் தீர்வு கிடைத்துவிடாது. எதையும் பக்குவமாக பேசி சமாளிப்பதே புத்திசாலித்தனம்.

மே 18-ம் தேதி ராகு - கேதுப் பெயர்ச்சி நிகழ்வதால் முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். வீட்டு பெரியவர்களின் ஆலோசனையை முழுமனதாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களால்தான் நீங்கள் இந்த அளவு வளர்ந்துள்ளீர்கள். அவர்களுக்கு என்ன தெரியும் என்று அவர்களை அலட்சியப்படுத்தாதீர்கள். தைரியத்துடன் நீங்கள் அணுகும் காரியங்கள் வெற்றியைத் தரும். அக்கம் பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள்.

இல்லத்தரசிகளுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். சமையலறைக்கு தேவையான சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரின் உடல்நலம் சீராகும். உங்களின் திறமையை குறைவாக எடை போட்ட சொந்த பந்தங்களுக்கு மத்தியில் சில வேலைகளை செய்து, அவர்களை ஆச்சர்யப்படுத்துவீர்கள். வீட்டில் இருந்தபடியே தையல், கைவினை பொருட்கள் தயாரிப்பு என்று பயிற்சி எடுத்துக் கொள்ளவும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும்.

கன்னிப் பெண்களுக்கு கூடிய விரைவில் கெட்டி மேளச் சப்தம் கேட்கும். காதல் விவகாரங்களில் மாட்டிக் கொள்ளாமல் வீட்டில் பார்க்கும் வரனை ஏற்றுக் கொள்ளுங்கள். பணியில் இருந்தபடியே மேற்படிப்பு படிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு இது சாதகமான காலம். உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். மாணவ- மாணவிகளுக்கு அலட்சியம், சோம்பல் நீங்கி படிப்பில் ஆர்வம் பிறக்கும். உயர்கல்விக்காக சிலர் ஹாஸ்டலில் தங்கி படிப்பர். பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிப்பீர்கள்.

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் நிம்மதி உண்டு. கடையை நவீன மயமாக்குவீர்கள். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றிவிட்டு, அனுபவம் மிகுந்த புது வேலையாட்களை சேர்ப்பீர்கள். விளம்பர யுக்திகளை சரியாக கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்ளவும்.

அதிகமாக மக்கள் கூடும் இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் செயல்படுவீர்கள். அரசாங்க கெடுபிடிகள் குறையும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டு தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். மரக்கிடங்கு வைக்க முயற்சி செய்வீர்கள். எழுதும் ஆர்வம் இருப்பவர்கள் அதற்கான பணிகளை தொடங்குங்கள்.

உத்தியோகத்தில் பிரச்சினை தந்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். பல நாட்களாக இழுபறியாக இருந்த பதவி உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கியும் உடனே கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரைப் பற்றியும் குறை கூறிக் கொண்டிருக்காதீர்கள். முக்கியமான கோப்புகளைக் கையாளும்போது கவனமாக இருக்கவும்.

அநாவசியமாக பேசிக் கொண்டிருக்க வேண்டாம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. கணினி துறையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத் தகுந்தாற்போல் சம்பள உயர்வும் உண்டு. தசைப் பிடிப்பு, கண் கோளாறு என்று உடல் உபாதை இருக்கும். அதற்கு தகுந்த மருத்துவம் செய்து கொள்ளவும். அலட்சியமாக இருக்காதீர்கள்.

கலைத்துறையினருக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். கிடைப்பதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் உங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, சவால்கள் நிறைந்ததாகவும், சாமர்த்தியத்தைக் கற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மனை வழிபடுங்கள். பள்ளிக் கூடங்களை புதுப்பிக்க முடிந்த வரை உதவுங்கள். எலுமிச்சை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். முன்னேற்றம் உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x