Published : 12 Apr 2025 12:08 PM
Last Updated : 12 Apr 2025 12:08 PM
தனுசு: முன்வைத்த காலை பின்வைக்காத குணம் கொண்ட நீங்கள், திடீர் முடிவுகளால் எதிரிகளை திக்குமுக்காட வைப்பீர்கள். உங்கள் ராசிக்கு 11-ம் ராசியில் லாப ஸ்தானத்தில் விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறும். முகப்பொலிவு கூடும். மே 14-ம் தேதி முதல் சகட குரு விலகி, சாதனை குருவாக பலன் தரப் போகிறார்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சொந்தமாக தொழிலில் லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எந்தப் பிரச்சினையானாலும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திடீர் பண வரவு உண்டு.
சொந்தமாக வீடு வாங்குவீர்கள் அல்லது கட்டி குடிபுகுவீர்கள். அதேசமயம் அரசு அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். சொத்துப் பிரச்சினைகளை சுமுகமாகப் பேசித்தீர்ப்பீர்கள். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. விலையுயர்ந்த ஆபரணம், அணிகலன்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த கம்பெனியில் புது வேலை கிடைக்கும்.
புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா இப்போது கிடைத்து, அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பணி ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.
மனைவி வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். தந்தை வழியில் இருந்த பகை நீங்கும். குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஒரு கண் இருக்கட்டும். அவர்களின் நட்பு வட்டத்தையும் கவனியுங்கள்.
மே 18-ம் தேதி நிகழவுள்ள ராகு - கேது பெயர்ச்சியின்படி எதிலும் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள் அடியோடு விலகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கூடும். கவுரவச் செலவுகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஓரளவு சேமிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள்.
நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசு வேலைகளை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். மனதுக்கு உற்சாகம் அளிக்கும். அக்கம் பக்கம் வீட்டாருடன் அவ்வப்போது கருத்துமோதல்கள் இருந்த நிலை மாறி, இனி உங்களிடம் வலிய வந்து பேசுவார்கள். அவர்களின் தேவையறிந்து உதவி செய்வீர்கள். எல்லோரிடமும் சுமுக நட்பு வைத்துக் கொள்வது நல்லது. அவர்கள்தான் முதலில் நமக்கு உதவிக்கு வருவார்கள்.
இல்லத்தரசிகளுக்கு மனஅழுத்தம், உடல் சோர்வு நீங்கும். உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்காமல் சின்னச் சின்ன உடற்பயிற்சியை மேற்கொண்டாலே போதும். போட்டிகளில் வெற்றி உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தங்க நகைகளை புதிய டிசைனில் வாங்கி மகிழ்வீர்கள். கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட கல்யாணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும். காதல் விவாகாரங்களில் சிக்கிக் கொள்ளாமல் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
எதிலும் கவனமாக இருக்கவும். முன்பின் தெரியாத நபர்களிடம் பழக வேண்டாம். சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும். தேவையில்லாத விஷயங்களை அவற்றில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பெற்றோரின் பேச்சை கேட்டு செயல்படுங்கள். கல்லூரிப் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மாணவ-மாணவிகளுக்கு தூக்கம், மறதி வரக்கூடும். படித்ததை ஒருமுறைக்கு இருமுறை எழுதி பார்ப்பது நல்லது. தேர்வு நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்க வேண்டாம். தெரியாதவற்றை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். எனினும் போட்டியாளர்களைத் திணறடிப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். வாடிக்கையாளர்களை கனிவாக நடத்துங்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு, அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு என்ன வழி என்று யோசனை செய்வீர்கள்.
பண விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். கூட்டுத்தொழில் பங்குதாரர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார். வேலையாட்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். குடும்ப பிரச்சினைகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உங்களின் கடின உழைப்பை மேலதிகாரி புரிந்து கொள்வார். அதேசமயம் பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். கணினி துறையினருக்கு பார்வை கோளாறு, தசைப் பிடிப்பு நீங்கும்.
புதிய சலுகைகள் உங்கள் இருக்கை தேடி வரும். அதிக நேரம் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்து, கணினியையே பார்த்து கொண்டிருக்காமல் அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். கலைத் துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவு கிட்டும். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்த நிலை மாறும். இனி உங்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படும். உங்களின் திறமைக்கேற்ப விருதுகள், பாராட்டுகள் கிடைக்கும். புதிய பட வாய்ப்புகள், தொலைக்காட்சி சீரியல் வாய்ப்புகள் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, உங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக அமையும்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள். காது கேளாதவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். வாழை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT