Published : 11 Apr 2025 05:16 PM
Last Updated : 11 Apr 2025 05:16 PM
கடகம்: தடைகளை உடைத்தெறியும் நெஞ்சுறுதியும், தாராள மனதுடன் எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சந்திரன் நிற்கும்போது விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் சகல விதத்திலும் உங்களின் திறமைகள் வெளிப்படும். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு வருமானம் உயரும். அடகிலிருந்த நகைகளையும் மீட்பீர்கள்.
பேச்சில் கம்பீரம் பிறக்கும். மகனுக்கு வெளிநாட்டில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிமாநிலங்களில் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு அமையும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிட்டும். பங்காளிப் பிரச்சினை முடிவுக்கு வரும். அடிக்கடி தொல்லை கொடுத்து வந்த வண்டியை மாற்றிவிட்டு புதிய வாகனத்தில் பயணிப்பீர்கள். ஓரளவு வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.
போராட்டங்களை கடந்து வெற்றி பெறுவீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். தெலுங்கு, இந்தி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். நீண்டநாட்களாக போக நினைத்தும் போக முடியாமல் போன புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். யோகா, தியானம் செய்வது நல்லது.
குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். எனினும் அவ்வப்போது கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வந்து போகும். அதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். தள்ளிப் போய்க் கொண்டிருந்த மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி வெகு விமரிசையாக நடத்திக் காட்டுவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை, சுபச் செலவுகளாக மாற்றிக் கொள்வீர்கள். சோர்வு, களைப்பு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.
மே 18-ம் தேதி முதல் ராகு - கேதுவின் சஞ்சாரப்படி, பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். அதன்மூலம் பிரச்சினைகள் வரலாம். ஆகவே, வாக்குவாதங்களைத் தவிர்த்து விடுங்கள். உறவினர்கள், நண்பர்களிடம் எவ்வித வாக்குறுதியும் தர வேண்டாம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வீட்டுப் பராமரிப்பு தொடர்பான செலவுகள் இருக்கத்தான் செய்யும். எனினும் சமாளித்து விடுவீர்கள். எதிர்பாராத பணவரவுகளும் உண்டு. வெளியூர் பயணங்களை அதிகம் விரும்புவீர்கள்.
இல்லத்தரசிகளுக்கு ஆடை, ஆபரணங்கள் சேரும். சிலர் பழைய தங்கத்தை கொடுத்துவிட்டு புது டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மனநிம்மதியுண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். புகுந்த வீட்டில் உங்கள் சொந்தம் பந்தங்களின் பெருமையை பேசிக் கொண்டிருக்காதீர்கள். மாமனார், மாமியா ருடனான கருத்து மோதல்கள் வந்து நீங்கும். கன்னிப்பெண்களுக்கு தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் கை கூடி வரும். கனவுத்தொல்லை, தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வியில் வெற்றியுண்டு. எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள்.
வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்க வாய்ப்பு உண்டு. சந்தை நிலவரத்தை அறிந்து புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். பழைய வேலையாட்களை மாற்றிவிட்டு அனுபவமிகுந்த ஆட்களை பணியில் அமர்த்துவீர்கள். புது டீலர்ஷிப், ஏஜென்ஸி எடுப்பீர்கள். இரும்பு, உணவு வகைகள், எண்ணெய் வகைகளால் லாபமீட்டுவீர்கள். கூட்டுத்தொழிலில் அவ்வப்போது போட்டிகள் இருந்தாலும் அதையெல்லாம் நினைத்து கவலைப்பட வேண்டாம்.
உத்தியோகத்தில் சவால்களைக் கடந்து எல்லோரும் வியக்கும்படி சில விஷயங்களில் சாதிப்பீர்கள். தொந்தரவு கொடுத்து வந்த அதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். புதுஅதிகாரி உங்களை புரிந்து கொள்வார். எதிர்பார்த்த சம்பள உயர்வு, சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகளும் தேடி வரும். கலைத்துறையினருக்கு பழைய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரக்கூடும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். புதுத்தன்மையுடன் உங்களின் படைப்புகள் வெளிப்படும்.
மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு சவால்களை கொடுத்து, சாதிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: ஸ்ரீமதுரை மீனாட்சியம்மனை வழிபடுங்கள். அபிராமி அந்தாதி படியுங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உணவு, உடை கொடுங்கள். புன்னை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். மகிழ்ச்சி பொங்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT