Published : 11 Apr 2025 04:51 PM
Last Updated : 11 Apr 2025 04:51 PM
மிதுனம்: மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரிக்கும் மனதும், ராஜதந்திரத்துடன் செயல்படும் குணமும் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணம் வரும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். பிள்ளைகளின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். ராகு பகவான் மே 18-ம் தேதி முதல் 9-ம் வீட்டில் வந்து அமர்வதால், குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
தள்ளிப் போன சுபகாரியங்கள் கைகூடி வரும். அடுக்கடுக்கான பிரச்சினைகளால் நிலை குலைந்த நிலை மாறி, இனி உங்களுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். கிடப்பில் கிடந்த பல காரியங்களை முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். தந்தைவழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். மனைவியுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். என்றாலும் மனைவிவழியில் ஆதரவு பெருகும். சிறு சிறு அறுவை சிகிச்சை வந்து நீங்கும். அரைகுறையாக நின்று போன வீட்டை முழுமையாக கட்டி முடிக்க வங்கியில் கடன் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வழக்குகளில் கவனம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிப்பது நல்லது.
வெகுநாட்களாக பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். குழந்தை பாக்கியம் கிட்டும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புது வாகனம் வாங்குவீர்கள். அக்கம் - பக்கம் வீட்டாருடன் அடிக்கடி மனக்கசப்புகள் இருந்த நிலை மாறும். அவர்கள் வீட்டு சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். சொந்த ஊர் கோயில்களில் முதல் மரியாதை கிடைக்கும்.
மே 14-ம் தேதி முதல் ஜென்ம குரு காலம் தொடங்குகிறது. உடன் பிறந்தவர்களிடையே கருத்துமோதல்கள் வரலாம். கவலை வேண்டாம். ஓரளவு நற்பலன்களையே குரு பகவான் கொடுப்பார். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். காய்கறி, பழ வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுவது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். சேமிப்பு கரையும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் உண்டாகும். ஆன்மிக பயணம் சென்று வருவதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இல்லத்தரசிகளுக்கு கணவர்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் மாறும். முகப்பொலிவு கூடும். மனப்போராட்டங்கள் ஓயும். பிள்ளைகளின் போக்கில் நிம்மதி கிட்டும். உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களால் பெருமையடைவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்லூரிப் படிப்பில் வெற்றியுண்டு. மனதுக்குப் பிடித்தவரையே திருமணம் செய்வீர்கள். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும். வகுப்பாசிரியரின் அன்பை பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு போட்டிகள் விலகும். முடங்கிக் கிடந்த நீங்கள் சுறுசுறுப்பு அடைவீர்கள். பழைய கடையை மாற்றியமைப்பீர்கள். வியாபார நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிம்மதியுண்டு. கூட்டுத்தொழிலில் தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். பங்குதாரர்களும் உங்களை புரிந்து கொள்வார்கள். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் கவலையின்றி முடிப்பீர்கள். சில பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களால் மதிப்பு, மரியாதை கூடும். புது சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு. கலைஞர்களுக்கு தள்ளித்தள்ளி போன வாய்ப்புகள் இனி தேடி வரும். வீண் விமர்சனம், வதந்தியிலிருந்து விடுபடுவீர்கள். புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்.
மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, தடைகளை தாண்டி சாதிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: ஸ்ரீவராகி அம்மனை வழிபடுங்கள். ஆதரவற்ற வயதானவர்களுக்கு உணவு, உடையை தானமாக கொடுங்கள். வேப்ப மரக்கன்று நட்டு பராமரியுங்கள். வெற்றியுண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT