Last Updated : 11 Apr, 2025 04:32 PM

 

Published : 11 Apr 2025 04:32 PM
Last Updated : 11 Apr 2025 04:32 PM

ரிஷபம் ராசிக்கான விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - தன்னம்பிக்கையுடன் சாதிப்பீர்கள்!

ரிஷபம்: புரட்சிகரமான முடிவுகளை எடுக்கும் நீங்கள் மூடி மறைத்துப் பேசத் தெரியாதவர்கள். உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் தடைகளை உடைந்து தன்னம்பிக்கையுடன் சாதிப்பீர்கள். இனி குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். ஜென்ம குருவாக இருந்து மனதை வாட்டிய குருபகவான் மே மாதம் 14-ம் தேதி முதல் விலகுவதால் தடைகள் உடைபடும். பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி கிட்டும். இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளால் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். அவர்களை கண்காணியுங்கள். என்றாலும் அவர்களின் உயர்கல்வி சிறப்பாக இருக்கும்.

புது எண்ணங்களால் முன்னேற்றம் உண்டு. குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். சொந்த வீடு, வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடனும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மகனுக்கு தள்ளிப் போய் கொண்டிருந்த திருமணம் இனி கைகூடி வரும். திருமணத்தை தடபுடலாக நடத்தி முடிப்பீர்கள். மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு, சண்டை சச்சரவுகள் விலகும். இளைய சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும். நேரம் தவறி தூங்குவதை தவிர்க்கப் பாருங்கள். அரசாங்க அதிகாரிகள் நண்பராவார்கள். அவர்களால் ஆதாயம் உண்டு.

குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுத்திய உறவினர்கள் விலகிச் செல்வார்கள். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். மே 18-ம் தேதி முதல் கேது 4-ல் வந்து அமருவதால் தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாகனத்தில் சாகசமெல்லாம் வேண்டாம். கவனமாக ஓட்டுங்கள். ராகுவின் நிலையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலையுயர்ந்த பொருள்கள் வீடு வந்து சேரும். பழைய விருந்தினர் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்பாடாகும். பால்ய நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள். அனுபவ மிகுந்த வழக்கறிஞரை நாடுங்கள். யோகா, தியானம் இவற்றில் மனம் ஈடுபாடு அதிகரிக்கும். புதுப் புது சிந்தனைகள் மனதுக்குள் தோன்றும். வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு சென்று வருவீர்கள்.

இல்லத்தரசிகளுக்கு வீட்டில் மதிப்பு கூடும். உங்கள் பேச்சுக்கு குடும்பத்தினர் முக்கியத்துவம் அளிப்பார்கள். விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் சேரும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பார். பேச்சில் கனிவு பிறக்கும். கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். பெற்றோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டுகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்த்துவிட்டு இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் வந்து போகும். ஆனாலும் லாபம் குறையாது. பணியாட்களை அரவணைத்து வேலை வாங்குங்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையுண்டு. ரியல்
எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாத்திருந்த பதவி உயர்வு இனி உங்கள் இருக்கை தேடி வரும். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

கணினிதுறையினருக்கு பெரிய நிறுவனத்தி லிருந்து வாய்ப்பு வரும். சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள். கலைத் துறையினருக்கு புது சிந்தனைகள் உதிக்கும். உங்களின் படைப்புகளை பாராட்டுவார்கள். வீண் விமர்சனத்தை தவிர்க்கப் பாருங்கள்.

மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெற வைப்பதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீகால பைரவரை ஞாயிற்றுக்கிழமைதோறும் தீபமேற்றி வழிபடுங்கள். பார்வையற்றோருக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். தென்னங்கன்று நட்டு பராமரியுங்கள். நல்லது நடக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x