Published : 11 Apr 2025 03:45 PM
Last Updated : 11 Apr 2025 03:45 PM
மேஷம்: பொதுவுடைமைச் சிந்தனையுள்ள நீங்கள் மற்றவர் மனம் கோணாதபடி பழகுபவர்கள். உங்கள் ராசிக்கு 7-வது இடத்தில் துலாம் ராசியில் சந்திரன் நிற்கும்போது விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் எதிலும் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதியிலேயே நின்று போன வேலைகள் எல்லாம் முடிவுக்கு வரும். மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் போட்டா போட்டி என்றிருந்த நிலைமாறும்.
பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அவர்களுக்கு நல்ல அறிவுகளையும், பாரம்பரியத்தையும் சொல்லி கொடுப்பீர்கள். அவர்களின் விருப்பங்களையும் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச்செலவுகள் அதிகரிக்கத்தான் செய்யும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். ஊர் பிரச்சினைகளில் தலையிட்டு முடிப்பீர்கள்.
மே 18-ம் தேதி முதல் ராகு உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மகளின் திருமணம் கைகூடி வரும். மகனுக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நண்பர்கள், உறவுகள் மத்தியில் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். செவ்வாய் நீச்சம் பெற்றிருப்பதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நேரம் தவறி சாப்பிடுவதை நிறுத்துங்கள். கார, அசைவ உணவுகள், நொறுக்குத் தீனிகளை குறைக்கப் பாருங்கள். முறையாக உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
மே மாதம் 14-ம் தேதி முதல் குரு பகவான் 3-ம் வீட்டுக்குள் செல்வதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். வீட்டில் குழப்பங்கள் நிலவும். மன ஆறுதல் என நினைத்துக் கொண்டு குடும்பப் பிரச்சினைகளை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.
வெகுநாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த குலதெய்வ பிரார்த்தனைகளை இப்போது நிறைவேற்றுவீர்கள். இப்போது சந்தையில் அறிமுகமாகியிருக்கும் வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள். சனிபகவான் பார்வை சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். என்றாலும் செலவுகளை கட்டுப்படுத் துங்கள். சொன்ன சொல்லை காப்
பாற்ற போராட வேண்டியது வரும்.
வீண் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். பார்வைக் கோளாறு வரக்கூடும். தந்தையாருக்கு அவ்வப்போது மருத்துவச் செலவுகள் வந்து போகும். நெஞ்சுவலி, கை, கால் அசதி வந்து நீங்கும். வீண் வறட்டு கவுரவத்துக்காக செலவு செய்வதை தவிர்த்து விடுங்கள்.
இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் .வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். முகப்பரு, அலர்ஜி மறையும். மாணவ-மாணவிகளுக்கு மறதி, மந்தம் விலகும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்வியில் வெற்றியுண்டு. பெற்றோருடனான மோதல் போக்கை தவிர்த்து அவர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் உண்டு. சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படு வீர்கள். போட்டிகளையும் தாண்டி ஓரளவு சம்பாதிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிம்மதியுண்டு. மருந்து, கமிஷன், மரவகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வந்து போகும்.
உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரி உங்களுக்கு ஆதரவாகத்தான் இருப்பார். எனினும் வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு. கணினிதுறையினருக்கு, பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். பழைய சம்பள பாக்கிகள் கைக்கு வரும்.
மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு மன உறுதியுடன் இலக்கை எட்டிப் பிடிப்பதாக அமையும்.
பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபடுங்கள். ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவுங்கள். தென்னை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். சுபிட்சம் உண்டாகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT