Last Updated : 09 Apr, 2025 06:08 PM

 

Published : 09 Apr 2025 06:08 PM
Last Updated : 09 Apr 2025 06:08 PM

கும்பம் ராசிக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2025

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்: 26-04-2025 அன்று ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம் | 17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார் | 06-03-2026 அன்று சனி பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11-05-2025 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2025 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம் | 21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி

பலன்கள்: எடுத்த காரியம் எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும் தனது புத்தி சாதுர்யத்தால் எளிதாக முடிக்கும் கும்ப ராசி அன்பர்களே! இந்த வருடம் நிரந்தர வருவாய் வரும் தொழில் அமையும். வெளியூர் பயணங்களை அடிக்கடி செய்து செய்தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். செய்கின்ற காரியங்களில் ஏற்படும் இடையூறுகளை சீரிய முயற்சிகளால் வெற்றியடையச் செய்வீர்கள்.

உறுதியுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். சார்ந்துள்ள துறையில் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் அறிவுரையால் தொழிலில் புதிய நுட்பங்களைப் புகுத்துவீர்கள். நண்பர்களும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பர். உறவினர்கள் அனைவரும் உங்களைப் புரிந்து கொள்வர். குடும்பத்தில் உங்களின் செல்வாக்கும் உயரத் தொடங்கும். தாய்வழி உறவுகளில் சிறப்புகள் உண்டாகும். மேலும் சிலருக்கு தாய்வழிச் சொத்துக்களும் கிடைக்கும்.

புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் மற்றவர்களுக்குப் பேரக்குழந்தை வாரிசும் உண்டாகும். எதையும் சமயமறிந்து பேசி வெற்றிபெறும் காலகட்டம் இது. வருமானம் சீராக இருந்தாலும் செலவுகள் சற்று அதிகரிக்கும். அதனால் சிக்கனத்தைக் கையாளவும். இதனால் புதிய ஊக்கத்துடனும் உத்வேகத்துடனும் வேலை செய்யும் பக்குவம் உண்டாகும். உங்கள் பேச்சில் சிறிது தற்பெருமை தலை தூக்கும். பயணங்கள் செய்யும்போது புதிய இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடும். வம்பு வழக்குகளில் விட்டுக் கொடுத்து சமாதானமாகவே போகப் பார்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் நன்கு உழைப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத உயர்வுகள் தேடிவரும். சக ஊழியர்கள் உங்கள் வேலையில் பங்கெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் அநாவசிய விரோதம் எதுவும் வேண்டாம். சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றங்களும் கிடைக்கும். பொறுமையுடனும் கடமை உணர்ச்சியுடனும் பணியாற்றுவீர்கள்.

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களைத் திருப்திகரமாக முடிப்பார்கள். இடையூறுகள் தோன்றினாலும் அவைகளைச் சமாளித்து வெளிவந்து விடுவீர்கள். காலதாமதமானாலும் திட்டமிட்ட பணிகள் நிறைவடைந்துவிடும். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முதலீடுகளைச் யோசித்துச் செய்யவும்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும் ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகளும் வரும். தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளில் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே முடியும்.

கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். அதில் திறமைகளை நன்றாக வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவுடன் இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் வரும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிட்டும். பிரச்சினைகள் உண்டாகும்போது பொறுமையுடன் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். பயணங்கள் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும்.

மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் அநாவசியப் பேச்சு வேண்டாம். மற்றபடி ஆசிரியர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.

சதயம்: இந்த ஆண்டு உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சினை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். தினசரி மாலை வேளையில் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும். சனிதோறும் விநாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். கிழக்கு, வடக்கு ஆகிய திசைகள் அனுகூலமாக இருக்கும். சூரியன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மை அளிப்பனவாக இருக்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x