Published : 09 Apr 2025 03:51 PM
Last Updated : 09 Apr 2025 03:51 PM
துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), புதன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்: 26-04-2025 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம் | 17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார் | 06-03-2026 அன்று சனி பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11-05-2025 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2025 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம் | 21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி
பலன்கள்: அனைவரையும் சரிசமமாக மதித்து நடத்தும் துலா ராசி அன்பர்களே! குடும்பத்தில் நிம்மதி நிலவும். குடும்பத்தாருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்ர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். தாயின் உடல்நிலை சீர்படும். உற்றார் உறவினர்கள் குறிப்பாக, மாமன் வகையில் இருந்து வந்த கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு உண்டாகும். புதிய வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் குடியிருக்கும் வீட்டைவிட்டு சற்று கூடுதல் வசதியான வீடுகளுக்கு மாறுவர். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தெளிந்த அறிவால் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துப் புகழப்படுவர். மேலும் சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்டியாகவும் இருப்பர்.
சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்படும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். அதனால் பழைய கடன்களை அடைக்கத் தொடங்குவர். அனாவசியச் செலவுகள் குறைந்து அவைகள் சுபச் செலவுகளாக முடியும். ஆன்மிகத்தில் பற்றுள்ளவர்கள் பெரியவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெறுவர். தியானம், யோகா போன்றவற்றில் பற்று ஏற்பட்டு அதில் சாதனைகளைச் செய்வர். உங்களின் மனோபலம் சற்று குறையும். அநாவசிய விஷயங்களில் மனதைக் குழப்பிக் கொள்வர். சிறிய அளவில் பொருளிழப்பு ஏற்படும். சிலருக்கு விஷ சந்துக்களால் ஏற்படும் உபாதையால் மருத்துவச் செலவும் உண்டாகும்.
உங்களின் நுண்ணறிவு வெளிப்படும். மேலும் பேச்சுத் திறமைக்கும் மதிப்பு ஏற்படும். புதிய யுக்திகளில் பணம் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் செல்லவும். செயல்களில் பொறுமையுடன் செயலாற்றி வெற்றியுடன் முடிப்பர். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் பெரிய லாபத்தை இதே காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் பணவரவைக் காண்பார்கள். பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாவிட்டாலும் தற்காலிகத் தீர்வு கிடைக்கும். அலுவலகங்களில் வேலைப் பளு சற்று கூடுதலாகவே இருக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு, நடந்து கொள்வர். கொடுத்த பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் பொறுப்புடனும் நிதானத்துடன் செய்து முடிப்பீர்கள்.
வியாபாரிகள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும். காரியங்கள் அனைத்தையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் கலந்தாலோசித்த பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கவும். பணவிஷயங்களில் எச்சரிக்கை தேவை.
அரசியல்வாதிகள் தங்கள் செயல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவர். மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவர். சம்பந்தமில்லாத விஷயங்களில் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம். கலைத்துறையினரின் புகழ் கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். உங்கள் முயற்சியும் உழைப்பும் வெற்றியைத் தேடித்தரும். நிதானப்போக்கினால் பெரிய முன்னேற்றத்திற்கு வழியை தேடித்தரும். புதிய வாய்ப்புகள் புகழுடன் வருமானத்தையும் கொண்டு வரும். ரசிகர்களால் எதிர்பார்த்த அளவுக்கு நன்மைகள் இருக்காது.
பெண்மணிகள் மனநிம்மதியைக் காண்பார்கள். தெய்வ வழிபாட்டிலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவர். புதிய சொத்து வாங்க ஆரம்பக்கட்ட வேலைகளைத் துவக்குவர். குடும்பத்தினருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பார்கள். கணவருடன் ஒற்றுமையை காண்பதுடன் குடும்பப் பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவர்.
மாணவமணிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவர். மனதிற்குப்பிடித்த விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் ஈடுபடுவர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். மேலும் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். புதிய நண்பர்களுடன் ஓரளவுக்குமேல் நட்பு கொள்ள வேண்டாம்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு சீரான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். எல்லாம் நல்லதே நடக்கும்.
சுவாதி: இந்த ஆண்டு வீண் கலகமும் அலைச்சலும் இருக்கும், இருப்பினும் குருவின் பார்வை தைரிய வீர்ய ஸ்தான ராசியில் விழுவதால் காரிய அனுகூலமும் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும்.
விசாகம்1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர்.
பரிகாரம்: வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். தினமும் முன்னோர்களை வணங்கவும். வெள்ளிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும். மேற்கு, தெற்கு ஆகிய திசைகள் அனுகூலமாக இருக்கும். சந்திரன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மைகளை அள்ளித் தரும்.
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT