Last Updated : 29 Mar, 2025 03:21 PM

 

Published : 29 Mar 2025 03:21 PM
Last Updated : 29 Mar 2025 03:21 PM

மேஷம் முதல் மீனம் வரை: சனிப் பெயர்ச்சி பலன்கள் 2025

மேஷம்: இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். ஏழரைச் சனி தொடங்குகிறதே என்று பதற வேண்டாம். தற்சமயம் விரய வீட்டில் வந்து அமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.

பார்வைப் பலன்கள்: சனிபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயமுண்டு. மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். தாய்வழியில் சொத்து வந்து சேரும். சனிபகவான் உங்களின் 2-ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற போராட வேண்டியது வரும். வீண் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். பார்வைக் கோளாறு வரக்கூடும். உறவினர்கள் மதிப்பார்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகரை அருகம்புல் மாலை அணிவித்து சதுர்த்தி நாளில் சென்று வணங்குங்கள். விநாயகர் அகவலைப் படியுங்கள். புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு உதவுங்கள். வசதி பெருகும் | முழுமையான பலன்களுக்கு > மேஷம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

ரிஷபம் : இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்சினைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்கிறார். இனி திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி கிட்டும். இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். குழந்தை வரம் கிட்டும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். சகோதரர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு.

பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் வீண் கோபம், அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களின் படிப்பு, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண்டி வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.

பரிகாரம்: போகர் குடிகொண்டிருக்கும் பழநி மலை சென்று அங்கு கோயில் கொண்டுள்ள தண்டாயுதபாணி சுவாமியை வணங்குங்கள். முடிந்தால் பால்குடம் எடுங்கள். மகிழ்ச்சியும், மனநிம்மதியும் தங்கும் | முழுமையான பலன்களுக்கு > ரிஷபம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

மிதுனம்: இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்சினைகளாலும், மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் நல்லதே நடக்கும். தடைபட்டுக் கொண்டிருந்த வேலைகள் முடிவுக்கு வரும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். மனைவிவழியில் ஆதரவு பெருகும். அரைகுறையாக நின்று போன வீட்டை முழுமையாக கட்டி முடிக்க வங்கியில் கடன் கிடைக்கும். வெகுநாட்களாக பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். குழந்தை பாக்கியம் உண்டாகும். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.

பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் பாதிக்கும். தாய்வழியில் சொத்துப் பிரச்சினை தலை தூக்கும். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவியுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் அடிக்கடி தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். சுப விரயங்கள் வரக்கூடும். ஆன்மிகப் பயணம் சென்று வருவதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

பரிகாரம்: திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாயநாதர் சந்நிதியில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும் | முழுமையான பலன்களுக்கு > மிதுனம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

கடகம்: இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால் இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மனதுக்குள் துளிர்விடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நீண்ட காலமாக இருந்துவந்த பங்காளிப் பிரச்சினை தீரும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.

பார்வைப் பலன்கள்: சனி பகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிட்டபடி எந்த காரியமும் முடிவுக்கு வரும். அடுத்தவர்களின் ஆலோசனைகளையே கேட்டுக் கொண்டிருந்த நீங்கள் இனி தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனி பகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பேச்சாலேயே மற்றவர்களை வசீகரிப்பீர்கள். எதிர்பாராத பணவரவுகளும் உண்டு.

பரிகாரம்: பாண்டிச்சேரிக்கு முன்புள்ள பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையில் வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். உயர்கல்விக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்களின் படிப்புக்கு உதவுங்கள். நினைத்ததை முடிப்பீர்கள் | முழுமையான பலன்களுக்கு > கடகம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

சிம்மம் இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எங்கும் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு வர வேண்டிய பூர்வீகச் சொத்தின் பங்கை போராடிப் பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.

பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். என்றாலும் சில சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த திடீர் பணவரவால் திக்குமுக்காடிப் போவீர்கள். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள் | முழுமையான பலன்களுக்கு > சிம்மம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

கன்னி: இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 7-ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். சனிபகவான் 7-ல் அமர்வதால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களும், சண்டை சச்சரவுகளும் வந்துபோகும். பிள்ளைகளால் செலவுகளும், அலைச்சலும் வரும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். மகளின் கல்யாணத்தை அலைந்து திரிந்து போராடித்தான் முடிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவர்.

பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் மறதியும், பித்தத்தால் தலைச்சுத்தலும் வந்து நீங்கும். விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் சேமிப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க வேண்டி வரும். வீட்டு பொருளாதாரத்தை மனதில் கொண்டு செயல்படுங்கள்

பரிகாரம்: திருநள்ளாறில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள். தொழுநோய் மற்றும் காசநோயாளிகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கி நல்லது நடக்கும். | முழுமையான பலன்களுக்கு > கன்னி ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

துலாம்: இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித் தருவார். பக்குவமாகப் பேசி பல காரியங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பிள்ளைப் பேறு கிட்டும். மனைவி உறுதுணையாக இருப்பார். குடும்ப உறுப்பினர்களுடன் தடைபட்டுவந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக் கசப்பு நீங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும்.

பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் கவுரவம் கூடும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனி பகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். சனிபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீண் விவாதங்களை தவிர்த்து விடுவதால் பல நன்மைகள் உண்டு.

பரிகாரம்: ஆரணி - படவேடு தடத்தில் ஏரிக்குப்பம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீஎந்திர சனீஸ்வர பகவானை சென்று வணங்குங்கள். கைம்பெண்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும் | முழுமையான பலன்களுக்கு > துலாம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

விருச்சிகம்: இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். உங்களை கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள், நண்பர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். 5-ம் இடத்தில் சனி அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் சரிசெய்து கொள்ளுங்கள். இனி வலி நீங்கி வலிமை கூடும். தாய்மாமன், அத்தை வகையில் அலைச்சல் இருக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும்.

பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் சில சமயங்களில் உங்களை அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடுவீர்கள். கண் எரிச்சல், பார்வைக் கோளாறு பிரச்சினைகள் வரக்கூடும். கண்ணைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை, கால்வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். அந்தரங்க விஷயங்களை எவரிடமும் சொல்லாதீர்கள். நெடு நாள்களாக வராமலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும்.

பரிகாரம்: தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். மேன்மேலும் முன்னேறுவீர்கள் | முழுமையான பலன்களுக்கு > விருச்சிகம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

தனுசு: இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, அலைச்சல் வந்து போகும். அடிக்கடி கோபப்படுவீர்கள். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேறு நிறுவனத்துக்கு வேலை மாறுவீர்கள். புது பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள மொரப்பாண்டி எனும் ஊரில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீபஞ்சலோக சனீஸ்வரரை சென்று வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும் | முழுமையான பலன்களுக்கு > தனுசு ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

மகரம்: இதுவரை பாதச் சனியாக அமர்ந்து உங்களை பல வழிகளிலும் பாடாய்ப்படுத்திய சனி பகவான், இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் உங்களை விட்டு விலகி 3-ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்து கொண்டிருந்த நீங்கள் இனி ஆரோக்கியம் அடைவீர்கள். நடைபயிற்சி, யோகா, தியானம் என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்வீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடவும். ஒருமுறை வெளியூர் சுற்றுலா, ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வாருங்கள். மகிழ்ச்சியாக இருக்கும்.

பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணத்துக்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் உங்களிடம் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். விட்டுப் பிடியுங்கள். அவ்வப்போது அவர்களிடம் குடும்ப சூழ்நிலையை எடுத்துச் சொல்லுங்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். முக்கிய பிரமுகர்கள், திரை பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

பரிகாரம்: தேனிக்கு அருகில் உள்ள குச்சனூரில் வீற்றிருக்கும் சுயம்பு சனீஸ்வர பகவானை சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழையின் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் | முழுமையான பலன்களுக்கு > மகரம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

கும்பம்: இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக அமர்ந்திருந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார். உங்களின் ராசிநாதனாகிய சனிபகவான் ஆட்சி பெற்று வலுவாக அமர்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். உடல்நிலை சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகளும், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். குடும்பத்தில் இனி மகிழ்ச்சி தங்கும்.

பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் பணிச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு.

பரிகாரம்: சென்னை பல்லாவரம் அருகிலுள்ள பொழிச்சலூரில் அருள்பாலிக்கும் வட திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவானை சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது நிறைவேறும் | முழுமையான பலன்களுக்கு > கும்பம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

மீனம்: இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். கவலை வேண்டாம். நல்லதையே செய்வார். ஆட்சிப் பெற்று சுபத்தன்மை அடைவதால் சனிபகவான் பணவரவையும் அதிகரிப்பார். இனி நிம்மதி பிறக்கும். வீண் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த பணம் வந்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில், ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜென்மச் சனி என்பதால் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. மெடி-க்ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது.

பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் விஐபிகள் அறிமுகமாவார்கள். கவுரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்க ளின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு கால்வலி கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனிபகவான் உங்களின் 10-ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

பரிகாரம்: திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபொங்கு சனீஸ்வரரை எள் தீபம் ஏற்றி வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். முயற்சிகள் வெற்றியடையும் | முழுமையான பலன்களுக்கு > மீனம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x