Last Updated : 15 Mar, 2025 06:17 PM

1  

Published : 15 Mar 2025 06:17 PM
Last Updated : 15 Mar 2025 06:17 PM

கடகம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027 முழுமையாக!

29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். கடகம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

கடகம்: எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே! எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். தலைமைதாங்கும் பண்பை இயற்கையிலேயே உடையவர்கள். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

கிரகநிலை: இதுவரை உங்களது அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி பாக்கிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்கள்: சனி பகவான் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் நிலவிய வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளையும் பெறுவீர்கள்.

உங்களை மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்பட வைப்பார். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலாவும் சென்று வருவீர்கள்.

பதற்றப்படாமல் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள். உங்களின் நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களின் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள்.

வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர்கொள்வீர்கள். தெய்வவழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அநாவசிய செலவுகளைத் தவிர்த்து, முக்கியமான செலவுகளை மட்டுமே செய்யவும். உங்களின் நடை, உடை, பாவனைகளில் அழகு கூடும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சகஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒரு முறைக்கு இருமுறை யோசித்துப் பேசவும்.

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் காரியங்களைச் செய்யவும்.

பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம்.
மாணவமணிகள் வீண்வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி உங்களின் முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்: பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும். உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும்.

பூசம்: குடும்பத்தில் தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும்.

ஆயில்யம்: பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும்.

பரிகாரம் : முடிந்தால் திங்களூர் சென்று தரிசனம் செய்து விட்டு வரவும். தினசரி 108 முறையாவது "ராம' நாமத்தை ஜெபிக்கவும். “சுந்தர காண்டம்” பாராயணம் செய்வது அதிக நன்மை தரும். மல்லிகை மலரை சிவனுக்கு பிரதோஷ வேளையில் சாத்திவர குழப்பங்கள் அகலும் | சனி பகவனின் பார்வைகள்:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x