Last Updated : 02 Apr, 2025 04:00 PM

 

Published : 02 Apr 2025 04:00 PM
Last Updated : 02 Apr 2025 04:00 PM

விருச்சிகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025 

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் புதன் , சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் (வ), சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

கிரக மாற்றங்கள்: 07-04-2025 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 10-04-2025 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-04-2025 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று ராகு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-04-2025 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: புகழ் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு பொன்னான வாழ்க்கையை அமைத்து நடுநிலைமையுடன் நடக்கும் எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே... இந்த மாதம் நீங்கள் செய்கிற எல்லா செயல்களும் ஒன்றுக்கு பத்தாக லாபத்தை தரும். சாதனைகள் பல நிகழ்த்தி புகழ் பெறும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வகையில் தகுந்த ஒத்துழைப்பும் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். வீடு மனை வாகனம் தொடர்பான இனங்களில் அனுகூலமான நிகழ்வுகள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள். அரசு சுற்றுலாத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளும் தனியார் சுற்றுலா நிறுவன அதிகாரிகளும் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்து பொருளாதார நிலை உயரப் பெறுவர்.

தொழிலதிபர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். நல்ல வியாபார வாய்ப்புகள் பெற்று முன்னேற்றம் பெறுவார்கள். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று பொருளாதார முன்னேற்றம் அடைவர். வியாபாரத்திற்கு புதிய வாகனம் வாங்குவீர்கள்.

பெண்கள் சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்கு உள்ளாவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு குறைவாக இருக்கும். தைரியமான குணங்களுடன் பணி செய்வதால் மட்டுமே இருக்கும் வேலையில் இடர்களை எதிர்கொள்ள முடியும்.

கலைத்துறையினருக்கு டெக்னிக்கல் துறையில் சார்ந்தவர்கள் மேன்மை அடைவர். பிற நாடுகளுக்கு சென்று பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. புகழ் பாராட்டு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். காத்திருந்து கடமைகளை சரியாக செய்பவர்களுக்கு வெற்றிக்கனி கிடைக்கும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும்.

மாணவர்கள் படிப்பினில் சிறப்பான பலனைக் காணலாம். இந்தக் கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம்.

விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலைநிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

அனுஷம்: இந்த மாதம் குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும்.

கேட்டை: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழே உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 4, 5 | அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x