Last Updated : 28 Jan, 2025 06:04 PM

 

Published : 28 Jan 2025 06:04 PM
Last Updated : 28 Jan 2025 06:04 PM

கன்னி ராசிக்கான பிப்ரவரி மாத பலன்கள் முழுமையாக | 2025

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 05.02.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11.02.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 12.02.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21.02.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 26.02.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: கன்னி ராசியினரே... நீங்கள் ஆடம்பர வாழ்க்கையில் நாட்டமுடையவர். சிக்கனத்தை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுபவர்கள். இந்த மாதம் தனாதிபதி சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் பணவரத்து அதிகரிக்கும். மனக் குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. சொத்து சம்பந்தமான காரிய தடைகள் விலகும். ராசிநாதன் புதன் சஞ்சாரம் பயணங்கள் மூலம் நன்மையை தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும்.

ராசிநாதனும் தொழில் ஸ்தானாதிபதியுமான புதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நட்பாக சஞ்சாரம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பாதிபதி சுக்கிரனின் உச்ச பலத்தால் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியை தரும். வேடிக்கை விநோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும்.

பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல் துறையினருக்கு அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சினை தலை தூக்கலாம். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.

அஸ்தம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியானநிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசியை அர்ப்பணித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குறைகள் நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 4, 5 | அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26 | இந்தமாதம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x