Published : 31 Jan 2020 10:11 AM
Last Updated : 31 Jan 2020 10:11 AM
’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
கிருத்திகை நட்சத்திரத்தின் சிறப்புகள் குறித்தும் கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்தும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது, கிருத்திகை நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்குமான தனித்தன்மைகளைப் பார்ப்போம்.
கார்த்திகை 1ம் பாதம்-
கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதமானது மேஷ ராசியில் இருக்கும். இவர்கள் பிறக்கும்போதே சொந்த வீட்டில்தான் பிறந்திருப்பார்கள். இல்லையென்றால் மேஷ ராசியின் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் பிறந்தவுடன் இவரின் தந்தை சொந்த வீடு வாங்கியிருப்பார். பூர்வீகச் சொத்து என ஏதாவது ஒரு சொத்து நிச்சயம் இருக்கும்.
இவருக்குக் கடினமான, நெருக்கடியான நிலை என ஏதாவதொரு சூழ்நிலை வரும்போது, இவருடைய பூர்வீகச் சொத்து இவரைக் காப்பாற்றும். மேலும் விரும்பிய அனைத்தும் பெரிய முயற்சி இல்லாமலேயே கிடைக்கும். உதாரணமாக சொந்த வீடு வாங்கும் எண்ணம் மனதில் நினைத்தாலே அதற்கான உதவிகள் அனைத்தும் தானாகத் தேடிவரும். நல்ல வீடு அமைவது முதல் வங்கிக்கடன் வரை எந்தத் தடையும் இல்லாமல் கிடைத்துவிடும்.
அரசுப் பணி, அரசியல் பதவி, அதிகாரப் பதவி, தனியார் நிறுவனமாக இருந்தாலும் அதிலும் நல்ல பதவி என எதிலும் முதன்மையாக இருப்பார்கள். பணியிடத்தில் சக பணியாளர், உயரதிகாரி என எவரிடமும் பாரபட்சம் இல்லாமல் பழகுவார்கள். அதேசமயம் தவறு எனத் தெரிந்தால் எந்தத் தயக்கமும் இல்லாமல் எதிர்த்து கேள்வி கேட்பார்கள்.
அதிகபட்சம் சொந்தத் தொழில் செய்வதில்தான் ஆர்வமுடையவராக இருப்பார்கள். குறிப்பாக கட்டுமானத்தொழில், கட்டுமானப் பொருள் உற்பத்தி, அதாவது செங்கல் சூளை, மணல் வியாபாரம்,சிமெண்ட் ஏஜென்சி, ஹார்டுவேர் பொருள் விற்பனை, மின்சாதன பொருள் விற்பனை, மர வியாபாரம் என கட்டுமானத் தொழில் தொடர்பாகவே தொழில் அமையும்.
மேலும் ஹோட்டல், கேட்டரிங், தேநீர் கடை போன்றவையும் தொழிலாக அமையும். வட்டித்தொழில், தங்கம் வியாபாரம் (ஆபரணம் அல்ல) அடகுக்கடை, லாட்டரி, சிட்பண்ட் நடத்துதல், தவணைமுறைத் திட்டத் தொழில் போன்றவையும் அமையும்.
ஆசிரியர், விரிவுரையாளர், வழக்கறிஞர், வங்கிப் பணி, கன்சல்டன்ட் என்னும் ஆலோசகர் வேலை, ஸ்டோர் கீப்பர்,திருமண மண்டப நிர்வாகம், திரைத்துறை தொடர்பான தயாரிப்பு நிர்வாகம் (புரொடக்ஷன் மேனேஜர்) போன்ற வேலைகளில் இருப்பார்கள்.
ஆரோக்கியம் -
அதிகப்படியான கார உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இளநீர், வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சி தரும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். பல் மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். (வாழ்வில் ஒருமுறையாவது மாவுக் கட்டு போட்டே ஆகவேண்டிய நிலை ஏற்படும்).
கார்த்திகை 1ம் பாதம்-
விருட்சம்- அத்தி மரம் (சென்ற பதிவில் இந்த மரம் பற்றி விரிவாகப் பார்த்தோம்)
இறைவன்- திருவண்ணாமலை அண்ணாமலையார். எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம். பரிகாரங்களில் ஹோமத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
வண்ணம்- இளம் சிவப்பு, மஞ்சள்
திசை - கிழக்கு
*********************************************
கார்த்திகை 2ம் பாதம்-
கார்த்திகை இரண்டாம் பாதம் ரிஷப ராசியில் இருக்கும். அளவு கடந்த பொறுமை, நிதானம், சரியானத் திட்டமிடல் என இருப்பவர்கள்.
திட்டமிடல் என்பது மிகச்சரியாக முழுமையான திட்டங்களை வடிவமைத்து அதில் சிறிதும் பிசகில்லாமல் செய்து முடிப்பவர்கள் கார்த்திகை 2ம் பாதக்காரர்கள். இவர்கள் பிறந்த பின் வீடு பல வசதிகளைக் கொண்டதாக அமையும்.
எவ்வளவு நல்ல வேலையில் இருந்தாலும் ஒரு கட்டத்தில் “நம்முடைய உழைப்பும், திறமையும் ஏன் அடுத்தவர் முன்னேற்றத்திற்கு பயன்பட வேண்டும்? நாமே சொந்த முயற்சியில் முன்னேற்றம் அடையலாமே” என்ற எண்ணம் தோன்றி சொந்தத் தொழில் செய்வார்கள். பணம் எப்படி பண்ணலாம்? என்பதை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.அவ்வளவு கச்சிதமாக பணம் பண்ணும் வித்தை அறிந்தவர்கள் இவர்கள்.
அதிகபட்சம் நிர்வாகத் துறையில் வேலையில் இருப்பார்கள். நிர்வாக ஆலோசகர், உபதேசத்தொழில், மேடைப் பேச்சாளர்கள், இசை வல்லுநர்கள், கலைத்துறை போன்ற வேலைகளில் இருப்பார்கள்.
கட்டிட வடிவமைப்பாளர், மண் ஆய்வாளர், நகை மதிப்பீட்டாளர் போன்ற வேலைகளிலும் இருப்பார்கள்.
அதிக பட்சம் இயந்திரங்களைக் கொண்டு செய்யப்படும் தொழில் செய்வார்கள். உதாரணமாக ஆடை உற்பத்தித் தொழில், கிரைண்டர் உற்பத்தி, கொசுவலை உற்பத்தி, பட்டு உற்பத்தி, பட்டு நெசவு, கவரிங் நகை தொழில் போன்ற தொழில்களில் இருப்பார்கள்.
பழைய பொருட்களை புதுப்பித்தல், எர்த் ஒர்க் எனும் பூமி தொடர்பான தொழில், விவசாய இயந்திரங்கள் தொழில், போர்வெல் தொழில், நிலத்தை சமப்படுத்துதல், அகலப்படுத்துதல், ஆழப்படுத்துதல், மண் தொடர்பான தொழில், மணல் தொழில், பேருந்து டிராவல்ஸ் போன்ற தொழில்கள் அமையும்.
ஆரோக்கியம்-
வாய்வு தரும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். காரணம், அடிக்கடி மூச்சுப்பிடிப்பு, சுளுக்கு போன்ற பிரச்சினைகள் வரும். புதிய இடத்திற்குச் செல்லும் போது தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் சளித்தொல்லை, தொண்டையில் தொற்று, வாய்ப்புண் போன்ற பிரச்சினைகள் வரும். ஒருசிலருக்கு கண்ணில் அதிகப்படியான பார்வை பிரச்சினைகள் வரவும் வாய்ப்பு உள்ளது.
******************************************************
கார்த்திகை 2ம் பாதம்-
விருட்சம்- புங்கமரம், நிழல் தருவதில் சிறப்பானது. முடிந்த இடத்தில் அதாவது சாலை ஓரங்கள், பள்ளி வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பகுதிகளில் வளர்த்து வாருங்கள்.
இறைவன்- நவகிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவான். எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் ஆலய வழிபாடுகளுக்குத் தேவையான தீபக்கால், தூபக்கால், மணிகள், விளக்குகள், நிவேதனத்திற்கு தேவையான அரிசி,பருப்பு, நெய், எண்ணெய் போன்ற பொருட்களில் ஏதாவது தானம் செய்வது சிறப்புப் பலன்கள் தரும்.
வண்ணம்- இளம் சிவப்பு, வெள்ளை, இளம் நீலம்
திசை - தென்கிழக்கு
************************************************
கார்த்திகை 3ம் பாதம்-
கார்த்திகை 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சுய கௌரவம் பார்ப்பவர்கள். தன்மானம் மிக அதிகம் கொண்டவர்கள். அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என நினைப்பவர்கள். திட்டமிடுதலும் திட்டமிட்டதை சரியாகச் செயல்படுத்துவதிலும் திறமையானவர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகம் உடையவர்கள். வசதி வாய்ப்புகளோடும் நல்ல செல்வவளத்துடனும் செட்டில் ஆவார்கள்.
சிறு வயதில் சகவாசத்தால் நிறைய தவறுகளை செய்திருப்பார்கள். மனைவி குழந்தை என குடும்பம் அமைந்தவுடன் முற்றிலுமாக தன்னை மாற்றிக்கொண்டிருப்பார். அலட்சிய மனோபாவம் அதிகம் இருக்கும். தன் குடும்ப உறவுகளிடமே அலட்சிய சுபாவத்தை வெளிப்படுத்துவார்கள். தனக்கான மதிப்பு மரியாதை கிடைக்கவில்லையென்றால் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்.
செய்கின்ற தொழிலாகட்டும், பார்க்கின்ற வேலையாகட்டும் மிகக் கச்சிதமான நேர்த்தி இருக்கும். அதிகபட்சம் பேர் அரசு வேலையும், அதிகாரிகளாகவும் இருப்பார்கள். இந்திய நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளில் பணிபுரிபவராக இருப்பார்கள்.
அரசியலில் ஆளுமை செலுத்துபவராகவும், நல்ல பதவியில் இருப்பவராகவும், மக்களிடம் நெருக்கமானவராகவும் இருப்பார்கள்.
தொழிலதிபராக சாதிப்பார்கள். கட்டுமான நிறுவனங்கள், அரசு காண்ட்ராக்ட் அதிலும் குறிப்பாக சாலை போடுதல், பாலங்கள் கட்டுதல் போன்ற தொழில் செய்பவராக இருப்பார்கள்.
ஆரோக்கியம் -
முதுகு பகுதியில் பாதிப்புகள், முதுகெலும்பு பிரச்சினைகள், நடக்கும்போது கால் இடறல், காலில் சிறு வித்தியாசங்கள் இருப்பது போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
கெட்ட பழக்கங்களில் இருந்து மீளாவிட்டால் அதற்கு அடிமையாகி விடுவார்கள். இருதார அமைப்பு உடையவர்கள். எனவே சபலத்திற்கு ஆட்பட்டால் அவமானங்களையும் சந்திக்க வேண்டிவரும். ஆனால் அதற்காக கவலையும் படமாட்டார்கள்.
விருட்சம்- தேக்கு, குறிப்பாக வெண்தேக்கு.
இறைவன்- திருக்கயிலாயம் என்னும் கயிலாய மலைக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று வரவேண்டும். சிவாலய தரிசனம் தவறாமல் செய்யவேண்டும். பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
வண்ணம்- சிவப்பு, இள நீலம்
திசை- வடமேற்கு
***************************************************
கார்த்திகை 4ம் பாதம்-
கார்த்திகை 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் இரக்க குணம் அதிகம் உடையவர்கள். குடும்ப உறவுகளிடம் அதீத பாசத்தை கொட்டுபவர்கள். எவரையும் சட்டென பகைத்துக்கொள்ள மாட்டார்கள். உறவினர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தேவையான உதவிகளை செய்து தருவார்கள். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வேலைகளை இழுத்துப்போட்டு செய்பவர்கள்.
வெளிநாட்டில் வேலை செய்பவராக இருப்பார்கள். பயணங்களை அதிகம் மேற்கொள்ளும் உத்தியோகம்தான் அமையும். குறிப்பாக விற்பனை பிரதிநிதி. கலைத்துறை தொடர்பான வேலைகளிலும் இருப்பார்கள். படித்த படிப்பிற்கும் செய்கின்ற உத்தியோகத்திற்கும் தொடர்பே இருக்காது.
மருத்துவத் துறையினராக இருந்தால் பெண்கள் நல மருத்துவராகவும், பிரசவ மருத்துவராகவும் குறிப்பாக கைராசி மருத்துவர் என்ற புகழோடும் இருப்பார்கள்.
ஓட்டுநர், நடத்துனர் வேலைகளிலும், மக்கள் கூடும் இடங்களில் தன்னார்வ பணிகளிலும், அலுவலகம், நட்சத்திர விடுதிகளில் வரவேற்பாளராகவும், திரை அரங்குகள் போன்ற இடங்களில் டிக்கெட் வழங்குபவராகவும், உணவகங்களில் உணவு வழங்குபவராகவும் இருப்பார்கள்.
உணவகத்தொழில், ஆடை ஆபரணங்கள் வியாபாரம், திரவம் தொடர்பான தொழில், உயர்ரக மதுபான விற்பனை, வெளிநாட்டு பொருள் விற்பனை, டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில் மற்றும் பயண ஏற்பாட்டாளர், வழிகாட்டி, ஆன்மிகம் தொடர்பான பொருட்கள் விற்பனை மையம் என தொழில் அமையும்.
ஆரோக்கியம் -
குளிர்ந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும், அப்போதே சமைத்த உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். பழைய உணவுகளை சூடுபடுத்தி கூட உண்ணக்கூடாது. மனத் தடுமாற்றம், மனக்கோளாறு, இல்லாத ஒன்றை கற்பனை செய்தல், பேய் பிசாசு நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை எவ்வளவோ அதே அளவு செய்வினை கோளாறு முதலானவற்றில் நம்பிக்கைகளும் அதிகம் இருக்கும்.
விருட்சம்- வேங்கை மரம், சௌகரியமான இடங்களில் வளர்த்து வாருங்கள்.
இறைவன்- திருவானைக்கா ஜம்புகேஸ்வர ஈசன் வழிபாடு அவசியம். எந்த ஆலயம் சென்றாலும் இறைவனின் அபிஷேகத்திற்குத் தேவையான பால், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற பொருட்களை வாங்கித்தாருங்கள். நன்மைகள் பெருகும்.
வண்ணம்- இளம் சிவப்பு, இளம் மஞ்சள்
திசை - வட கிழக்கு
அடுத்த பதிவில் குறும்புக் கண்ணன் பிறந்த ரோகிணி எனும் முத்துத் தேர் நட்சத்திரம் குறித்து பார்ப்போம்.
- வளரும்
***********************************************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT