Published : 16 Jul 2019 09:27 AM
Last Updated : 16 Jul 2019 09:27 AM
ஜோதிடம் அறிவோம் 2 - 56: இதுதான்... இப்படித்தான்!
ஜோதிடர் ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
திதி சூன்யம் பற்றிய தகவல்களைப் பார்த்து வருகிறோம். இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.
சென்ற பதிவில் திதிகளின் தெய்வங்களைப் பார்த்தோம். இந்த தெய்வங்களை வணங்கிவந்தாலே திதி சூன்யத்திலிருந்து நாம் காப்பாற்றப்படுவோம்.
இருந்தாலும் திதிகளின் நித்யா தேவிகளையும் அறிந்து கொள்வோம். இந்த திதி நித்யாதேவிகளே திதி சூன்யத்தை முற்றிலுமாக நீக்க வல்லது என்பது சத்தியம்,
திதி நித்யா தேவியர் பதினைந்து பேர்,இவர்களில் யார் யார் எந்த திதிக்கு உரியவர்கள் என்பதைப் பார்ப்போம்.
முதலில் - வளர்பிறை திதிகள்-
பிரதமை - ஶ்ரீகாமேஷ்வரி நித்யா
துவிதியை(துதியை)- ஶ்ரீபகமாலினி நித்யா
திருதியை - ஶ்ரீநித்யக்லின்னா நித்யா
சதுர்த்தி - ஶ்ரீபேருண்டா நித்யா
பஞ்சமி - ஶ்ரீவஹ்னி நித்யா
சஷ்டி - ஶ்ரீவஜ்ரேஸ்வேரி நித்யா
சப்தமி - ஶ்ரீசிவதூதி நித்யா
அஷ்டமி - ஶ்ரீத்வரிதா நித்யா
நவமி - ஶ்ரீலஸீந்தரி நித்யா
தசமி - ஶ்ரீநித்யா நித்யா
ஏகாதசி - ஶ்ரீநீலபதாகா நித்யா
துவாதசி - ஶ்ரீவிஜயா நித்யா
திரயோதசி - ஶ்ரீஸர்வமங்களா நித்யா
சதுர்தசி - ஶ்ரீஜ்வாலாமாலினி நித்யா
பௌர்ணமி -ஶ்ரீசித்ரா நித்யா
இப்போது தேய்பிறை திதி நித்யாக்கள்:
பிரதமை - ஶ்ரீசித்ரா நித்யா
துவிதியை(துதியை) -ஜ்வாலாமாலினி நித்யா
திருதியை- ஶ்ரீஸர்வமங்களா நித்யா
சதுர்த்தி - ஶ்ரீவிஜயா நித்யா
பஞ்சமி - ஶ்ரீநீலபதாகா நித்யா
சஷ்டி - ஶ்ரீநித்ய நித்யா
சப்தமி - ஶ்ரீலஸீந்தரி நித்யா
அஷ்டமி - ஶ்ரீத்வரிதா நித்யா
நவமி - ஶ்ரீசிவதூதி நித்யா
தசமி - ஶ்ரீவஜ்ரச்வேரி நித்யா
ஏகாதசி - ஶ்ரீவாஹ்னி நித்யா
துவாதசி - ஶ்ரீபேருண்டா நித்யா
திரயோதசி - ஶ்ரீநித்யக்லின்னா நித்யா
சதுர்தசி - ஶ்ரீபகமாலினி நித்யா
அமாவாசை - ஶ்ரீகாமேஷ்வரி நித்யா
சரி... இவர்கள் எந்தெந்த ஆலயத்தில் வீற்றிருக்கிறார்கள்? அந்த விபரத்தையும் தந்துவிடுங்கள் என்றுதானே கேட்கிறீர்கள்?
ஆனால் இவர்கள் எல்லா ஆலயங்களிலும் இருக்கிறார்கள், சந்நிதியில் காட்சி தருபவர்களாக அல்ல.. சூட்சும வடிவமாக இருக்கிறார்கள். எப்படி?
மிக சக்தி வாய்ந்ததும், பிரபஞ்ச ஆற்றலையே தன்னுள் அடக்கிவைத்திருக்கும், தெய்வசக்தியையும் சாந்நித்தியத்தையும் வெளிப்படுத்துவதுமான ஶ்ரீசக்கரம் நீங்கள் அறிந்ததுதான்!
அறியாதது....!?
இந்த ஶ்ரீசக்கரத்தின் சக்தியை இந்த பிரபஞ்சத்திற்கு சரியான அளவீட்டு முறையில் பகுத்துத் தருவது இந்த நித்யா தேவியரின் கடமை. இவர்கள் இந்த ஶ்ரீசக்கரத்தின் மையப்பகுதியின் முதல் சுற்றுப்பகுதியான முக்கோணத்தில் வாசம் செய்கிறார்கள்.
ஶ்ரீசக்கரத்தின் வெளிப்புறம் இருப்பதே நித்யா தேவியரின் சூட்சும வடிவம்.
ஶ்ரீசக்கரத்தை வீட்டில் வைத்து முறையாக வணங்கி வந்தால் போதும், உங்கள் திதி சூன்ய தோஷம் முற்றிலும் விலகி , நன்மைகள் பெருகும் என்பது உறுதி.
முன்னோர்க்கு தர்ப்பணம் தரும்போதும் மறக்காமல் அந்தந்த திதிக்கான நித்யாதேவியரை வணங்கி வந்தால் இன்னும் சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
திதி கொடுப்பதில் இன்னும் நிறைய பேருக்கு சந்தேகங்களும் குழப்பங்களும் இருக்கின்றன. நிறையபேர் என்னிடம் இது பற்றிய கேள்விகளை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமின்றி வாசகர்களான உங்களுக்கும் அந்த விளக்கம் பயன் தரும்.
எந்த திதியில் இறந்தார் என்பது மட்டுமல்ல, அது வளர்பிறையா? தேய்பிறையா? இதை கண்டிப்பாக அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆங்கில மாதங்களும், ஆங்கிலத் தேதியும் இந்தக் கணக்கில் வரவேவராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தமிழ்மாதம் மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்.
ஒருவேளை திதிக்கான மாதத்தில் தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டால் அடுத்த தமிழ் மாதத்தில் அதே (வளர்பிறையா,தேய்பிறையா என்பதைப் பார்த்து) திதியில் தர்ப்பணம் தரலாம்.
“என்னால் வருடாந்திர திதி ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை” என்பவர்களுக்கு....
புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை,தை மாதம் வரும் அமாவாசை ....இதில் தவறாமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரலாம்.
வெகு காலமாக திதி கொடுக்காமல் மறந்து போய்விட்டேனே என்று சிலர் வருத்தமும் துக்கமுமாக இருப்பார்கள். அவர்களுக்கு... ராமேஸ்வரத்திலும் பின்பு காசியிலும் நீத்தார் நினைவு சடங்கு செய்தால் பித்ரு தோஷம் மற்றும் திதி கொடுக்காமல் போன பாவம் என சகல பாவங்களும் தீரும்.
முக்கிய விஷயம்.... காசி, ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுத்துவிட்டால்..... அதன் பின் முன்னோருக்கு தர்ப்பணம் தரத்தேவையில்லை என்பது ஐதீகம்தான். அதேசமயம், முடிகிற வரைக்கும், மாதாந்திர அனுஷ்டானங்களையும் வருடாந்திர அனுஷ்டானங்களையும் குறைவறைச் செய்து தர்ப்பணங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதும் நியதி. ’அதான் காசில கொடுத்தாச்சே... ராமேஸ்வரத்துல கொடுத்தாச்சே...’ என்று முன்னோரை மறக்கச்சொல்லவில்லை. அவர்களை மறக்காமல் அவர்களின் நினைவாக தர்ம காரியங்கள் செய்து வாருங்கள். அது அவர்களை திருப்திபடுத்துவது மட்டுமல்ல உங்கள் வம்சமும் வாழையடி வாழையென விருத்தியாகும்; சகல ஐஸ்வரியங்களும் பெற்று, உன்னத நிலையில் வாழ்வார்கள்!
அடுத்த பதிவில் சந்திப்போம்......
- தெளிவோம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT