Published : 06 Jun 2015 12:45 PM
Last Updated : 06 Jun 2015 12:45 PM
கலைப் பிரியர்களின் வீட்டை அலங்கரிப்பது அவ்வளவு சுலபமானதல்ல. கலையின் பிரதிபலிப்பை வீட்டு அலங்காரத்துக்குள் கொண்டு வருவது சிறிது கடினமான விஷயம்தான். ஆனால், சில வரையறைகளைப் பின்பற்றினால், வீட்டுக்குள் கலையின் தாக்கத்தைக் கொண்டுவந்துவிடலாம்.
வண்ணங்களும் கோடுகளும்
ஒரு கலைப்பொருளின் வண்ணத்தையும், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கோடுகளின் தன்மையையும் வீட்டில் உள்ள மற்ற பொருள்களுக்கும் கடத்தலாம். அதனால், அறையில் கலையின் தாக்கம் விரிவடையும். உங்கள் வீட்டுச் சுவரில் மாட்டியிருக்கும் ஓவியத்தின் வண்ணங்களையும், கோடுகளையும் அறைக்கலன்கள், தரைவிரிப்புகள், தலையணைகள், பூஜாடிகள், பூக்கள் போன்ற அம்சங்களில் பின்பற்றலாம்.
இதனால் ஓவியத்தின் தன்மை முக்கியத்துவம் பெறுவதோடு மட்டுமல்லாமல் அறையில் கலையின் தாக்கமும் அதிகரிக்கும். இந்த வண்ணங்களையும், கோடுகளையும் திரும்ப திரும்ப அறையில் பயன்படுத்துவதன் மூலம் ஒருவிதமான கலைநயத்தை அறைக்கு வழங்கமுடியும்.
நிறங்களின் சமநிலை
ஓவியங்களில் காணப்படும் நிறங்களை அதே அளவில் வீட்டில் இருக்கும் பொருட்களிலும் பின்பற்றலாம். அது ஓவியங்களுக்கும், வீட்டின் பொருட்களுக்கும் ஒருவிதமான தொடர்பை ஏற்படுத்தும். ஆனால், நிறங்களைச் சமநிலையுடன் பயன்படுத்த வேண்டும். ஓர் ஓவியத்தில் பிரதானமாக என்ன நிறம் இருக்கிறதோ, அதே நிறத்தில் பெரிய அறைக்கலன்களை வடிவமைக்கலாம். குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறத்தில் சிறிய பொருட்களை வடிவமைக்கலாம். இது அறைக்கு ஒரு சமநிலையான தோற்றத்தைக் கொடுக்கும்.
கலையின் பன்முகத்தன்மை
அறையில் ஒரே ஒரு ஓவியத்தை மட்டும் வைக்காமல் பல ஓவியங்களை வைப்பதனால் ஒருவிதத் தொடர்ச்சியை வீட்டுக்குள் உருவாக்கலாம். அந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே ஓவியருடையதாக இருந்தால் அது இன்னும் வசதி. ஏனென்றால், இயல்பாக ஓவியங்களில் தொடர்ச்சி அமைந்துவிடும். அந்த ஓவியங் களில் இருக்கும் கோடுகள் அறையில் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அறைக்கலன்களின் அமைப்பு
உங்கள் கலைப்பொருளை வைக்கும் இடம் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு நீங்கள் அறைக்கலன்களை வைக்கும் இடமும் முக்கியம். உங்கள் ஓவியத்துக்கு எந்த இடைஞ்சலும் கொடுக்காத இடத்தில் அறைக்கலன்களை வைக்க வேண்டும். அறைக்கலன்களை சரியான இடத்தில் வைத்தால், அதுவே உங்கள் ஓவியத்துக்கு இன்னும் பிரதானமான தோற்றத்தைக் கொடுக்கும்.
உங்கள் கலைப்பொருளை வைக்கும் இடம் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு நீங்கள் அறைக்கலன்களை வைக்கும் இடமும் முக்கியம். உங்கள் ஓவியத்துக்கு எந்த இடைஞ்சலும் கொடுக்காத இடத்தில் அறைக்கலன்களை வைக்க வேண்டும். அறைக்கலன்களை சரியான இடத்தில் வைத்தால், அதுவே உங்கள் ஓவியத்துக்கு இன்னும் பிரதானமான தோற்றத்தைக் கொடுக்கும்.
பிரதிபலிப்பு
சுவர்களில் கண்ணாடிகளை மாட்டி வைப்பதன் மூலம் ஓவியங்களின் பிரதிபலிப்பை அறைக்குள் இன்னும் பிரம்மாண்டமாக்கிக் காட்டலாம். சுவர்களில் மட்டுமல்லாமல் கூரைகளிலும் கண்ணாடிகளைப் பொருத் தலாம். இது வீட்டுக்குள் ஓவியங்களின் பிரதிபலிப்பை இன்னும் கூடுதலாக்கிக் காட்டும்.
வெளிச்சம்
ஓவியங்களுக்குச் சரியான வெளிச்சம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஓவியத்தின் மீது ‘ஸ்பாட் லைட்’ பொருத்துவதால் ஓவியத்தின் தன்மைகள் இன்னும் கூடுதலாக வெளிப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT