Published : 07 Apr 2014 06:01 PM
Last Updated : 07 Apr 2014 06:01 PM

தூத்துக்குடியின் சுற்றுச்சூழல் பிரச்சினைக்குத் தீர்வு தேவை!

# சேது சமுத்திரத் திட்டம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி நீதிமன்றத்தில் போய் நிற்கிறது. திட்டம் தேவையா… தேவை இல்லையா என்று அரசியல் கலப்பு இல்லாமல் மக்கள் நலன் மட்டும் சார்ந்து முடிவு எடுக்க வேண்டும். மக்கள் வரிப் பணத்தை வீணாக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே இந்தத் திட்டத்தைக் கையில் எடுப்பதாகவும், பின்னர் அப்படியே மறந்துவிடுவதாகவும் தொகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

# தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தின் வளர்ச்சியைக் கண்டுகொள்வாரில்லை. கழிப்பறை, குடிநீர், மருத்துவ வசதி, ஓய்வு அறை, கேன்டீன் போன்ற எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை.

# தேசிய அளவில் உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது தூத்துக்குடி. கலப்படத் தடைச் சட்டத்தில் இருந்து உப்புக்கு விலக்கு அளிக்க வேண்டும். உப்பளங்களுக்குச் சலுகைக் கட்டணத்தில் மின்சாரமும், உப்பு ஏற்றுமதிக்குச் சலுகையும் அளிக்க வேண்டும். உப்பளத் தொழிலாளர்களைப் பாதுகாக்க மத்திய உப்புத் துறை நிலங்களைத் தொழிலாளர் களுக்கே நேரடியாகக் குத்தகைக்கு விட வேண்டும்.

# தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதானத் தொழில்களில் ஒன்று மீன்பிடித் தொழில். கடல் அரிப்பு, பருவநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைவது, மீன்பாடு குறைவு போன்ற காரணங்களால் மீன்பிடித் தொழில் நசிந்துவருகிறது. மீன்பிடித் தடைக் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். கடலோரக் கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். கடற்கரைப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. மீனவர் நலன் காக்க, மீனவர் பேரிடர் விபத்து கொள்கையை உருவாக்க வேண்டும்.

# தூத்துக்குடி பகுதியில் சுமார் 15 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. எனவே, சுற்றுச்சூழல் மாசு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குரல்.

# கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம் பகுதிகளில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அதிகம். மூலப்பொருட்களின் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் தீப்பெட்டித் தொழில் நலிவடைந்துவருகிறது. இந்தத் தொழிலைப் பாது காக்கக் கலால் வரியில் இருந்து விலக்கு, தீப்பெட்டி ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை 7 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கை.

# மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவில்பட்டியில் தண்ணீர்ப் பஞ்சம் அதிகம். இரண்டாவது குடிநீர்க் குழாய் அமைக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கியும் வேலைகள் துரிதமாக நடக்கவில்லை. இந்தப் பணியை விரைவுபடுத்தி தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க வேண்டும்.

# குட்டி திருப்பூர் என்றழைக்கப்படும் புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைகள் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் நேர வாக்குறுதிகளாக மட்டுமே இருந்துவருவ தாகச் சுட்டிக்காட்டுகின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

# மாவட்டத்தின் வட பகுதிகளான கோவில்பட்டி, விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம் பகுதி மானாவாரி விவசாயத்தையே நம்பியுள்ளது. மழை பொய்த்தால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறிதான். இந்தப் பகுதியில் விவசாயம் சார்ந்த சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் என்பது மக்களின் நீண்டகாலக் கனவு.

# விளாத்திக்குளம் பகுதியில் மிளகாய் அதிக அளவு பயிரிடப்படுகிறது. இவற்றைச் சேமித்து வைத்து, நல்ல விலைக்கு விற்பனை செய்யக் குளிர்ப்பதனச் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும்.

# குலசேகரப்பட்டணத்தில் இந்தியாவின் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும்.  ஹரிகோட்டாவில் அந்த ஏவுதளம் அமைவதற்கு ஆந்திர மாநிலத்தின் அதிகாரிகள் முயற்சி செய்வதைத் தடுக்க வேண்டும். அதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்பது மொத்தத் தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டால், தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தரமான மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ராணுவ ஆராய்ச்சி மையங்கள் என தென் தமிழகம் முழுவதும் பெரும் வளர்ச்சி அடையும் என்கின்றனர் மக்கள்.

# சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் கடற்கரை மணல் கொள்ளையை முற்றிலும் தடுக்க வேண்டும்.

# தூத்துக்குடியில் நிலம், நீர், காற்று பெருமளவு மாசுபட்டுள்ளது. இது தொடர்பாக உரிய ஆய்வு நடத்தித் தீர்வுகாண வேண்டும்.

# உடன்குடி அனல் மின் நிலையப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x