Published : 01 Oct 2013 11:16 PM
Last Updated : 01 Oct 2013 11:16 PM
“என்ன இன்னைக்கும் அவன் வரலையா? என்ன ஆச்சு அவனுக்கு?”
மாணவர்களும் மாணவிகளும் இணைந்து பயிலும் வகுப்பறை அது. மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். விழிகளில் சட்சட்டென மாறும் சமிக்ஞை பரிமாற்றங்கள். மாணவிகளில் சிலர் ரேவதி எனும் அந்த மாணவியையே உற்றுப் பார்க்கின்றனர். இவை அனைத்தும் இமைக்கும் நொடியில் நடந்து முடிகின்றன.
வகுப்பு முடிந்து தனியறையில் அமர்ந்திருக்கிறேன். பாலு வருகிறான், கிருஷ்ணனை துணைக்கு அழைத்துக்கொண்டு!
“மே ஐ கம் இன் மேடம்.?”
“ப்ளீஸ் கம்...”
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க , பாலு ஆரம்பித்தான். “பிரசாத்துக்கு லவ் ஃபெய்லியர் மேடம்...”
அதுவரை மும்முரமாக எழுதிக்கொண்டே காது கொடுத்துக்கொண்டிருந்தவள், நிமிர்ந்தேன்.
“என்ன சொன்ன?”
“அவனுக்கு லவ் ஃபெய்லியர் மேடம்”
“இந்த வயசுல லவ்வே அதிகம்.. இதுல ஃபெயிலியர் வேறயா? என்ன விஷயம்? முழுசா சொல்லு!”
கடகடவென நம்பமுடியாத பல தகவல்களை ஒப்புவித்தான்.
ஏழாம் வகுப்பு முதல் ஒன்றாய் படித்துவரும் ரேவதியை அவன் காதலிக்கிறானாம்! இதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவள் பத்தாம் வகுப்பு வந்த பிறகு அவனை கண்டுக் கொள்வதே இல்லையாம். அதில் மனம் நொந்து இவன் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லையாம்!
முழுவதையும் கேட்ட பிறகு கூறினேன்,”நீங்க ரெண்டு பேரும் அவன் வீட்டுக்கு போய் மேம் ஸ்கூலுக்கு வரச்சொன்னாங்கன்னு சொல்லி அவனை அழைச்சிட்டு வரணும். புரியுதா?”
“ஓகே மேம் !”
மறுநாள் வந்தவனை பார்த்து அதிர்ந்து போனேன்!
டைபாய்டு நோயால் பல நாள் படுக்கையில் விழுந்து எழுந்ததை போன்ற தோற்றத்தில் கண்களின் கீழே கருவளையத்துடன், பரட்டை தலையுடன் உடல் மெலிந்து கன்னங்கள் ஒட்டி காதல் தோல்வியில் கசந்து நிற்கும் ஒரு இருபத்தைந்து வயது இளைஞனை நினைவூட்டினான் அந்த பதினைந்து வயது சிறுவன்.
அவனையே சில நொடிகள் உற்றுப் பார்த்தேன். எட்டாம் வகுப்பு மாணவனாய் என்னிடம் படித்தபோதிருந்த அவன் தோற்றத்தை நினைத்துப் பார்த்தேன்; ஒரு கன்றுக்குட்டியின் துடிப்புடன் அத்தனை உற்சாகத்துடன் அலைஅலையான கேசத்துடனும் கண்களில் தொக்கி நிற்கும் குறும்புடனும் சிரித்த முகத்துடனும் வளைய வருவான். படிப்பில் சுமார்தான் என்றாலும் குறைந்த பட்சம் தேர்ச்சியாவது பெற்று விடுவான்.
“என்னடா கண்ணா, பாலு என்னென்னவோ சொல்றான்...” என்றேன். பதில் இல்லை!
அருகில் நின்றவன் சொன்னான், “ரொம்ப கவலைப்படறான் மேம்... ஒழுங்கா சாப்பிடறது இல்லை... தூங்கறது கூட இல்லை...”
“உன்னை பாக்கறதுக்கே கஷ்டமா இருக்கேடா... ஏன் இப்படி?” என்றது தான் தாமதம், விம்ம ஆரம்பித்தான் .
“அவளை மறக்க முடியலையே மேம்”
“மறக்க முடியலையே” - இந்த வார்த்தைகள் எனக்கு வேறொரு சம்பவத்தை நினைவூட்டின.
இதே வலியுடன் கேட்ட அது ஒரு பெண்ணின் குரல்! முதுகலை பட்டம் பயில வந்தவள் படித்த பாடம் - காதல்.
சிலநாட்களாக ஏதோ ஊடலில் காதலனின் பாராமுகத்தால் தவித்து போனவள் கூறிய வார்த்தைகள் அவை.
“மறக்க முடியலையே மேம்! நொடிக்கு நொடி அவன் முகமே கண்முன்னாடி இருக்கு. அவன் பேசின வார்த்தைகளையே விடாம மனசு அசைபோடுது. பைத்தியம் பிடிச்சா மாதிரி என் வேலைகள் எல்லாத்தையும் மறந்து அவன் முகமே மனசு பூரா நிறைஞ்சிருக்கு..! ப்ளீஸ் மேம்... என்னோட வாங்க, அவன் நம்பர் சொல்றேன். எனக்காக கொஞ்சம் அவனோட பேசி கொடுக்கறீங்களா? எடுத்தவுடனே என் குரல் கேட்டாலே அவன் போனை வெச்சிடறான். எனக்கு அவனோட பேசணும் ப்ளீஸ்!”
சுய கௌரவத்தை விட்டு கெஞ்சிக் கொண்டிருந்தவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவனுக்கு போன் செய்து அவள் பேச சற்று அவகாசம் கொடுக்கவேண்டும் என்று கூறி விட்டு அவள் கரங்களில் போனை கொடுத்தேன். காதலின் தவிப்பை, அது தரும் வேதனையை அன்று தான் அருகிலிருந்து பார்த்தேன்.
கண்களில் வழியும் கண்ணீரோடு அவனுடன் அன்று உரையாடிக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணின் தவிப்புக்கும் இதோ எதிரில் நிற்கும் பதின்பருவ மாணவனின் தவிப்புக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை.
காதலுணர்வு மனிதன் பிறந்தது முதலே இருக்கின்றது என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள். ஒரு குழந்தையின் முதல் காதல் அதன் தாய் மீது என்பது அவர்களின் கூற்று. பிறகு சமுதாயத்தில் விடப்பட்ட குழந்தை, உடன் பயிலும் மாணவர் பால் ஈர்க்கப்படுகிறான். அதன் பிறகே கவனம் எதிர்பாலினரின் மீது திரும்புகிறது என்று மனித மனங்களின் உணர்வு பரிணாம வளர்ச்சியை கணக்கிடுகின்றனர்.
வளர்ந்து பண்பட்ட நிலையில் இருப்பவர்களாலேயே இத்தவிப்பை ஒதுக்க இயலவில்லை எனும் போது, மனித வாழ்வின் மிகச் சிக்கலான பருவத்தில் அடியெடுத்து வைக்கும் இவனைப் போன்ற சிறுவர்கள் சிந்தை தடுமாறி போவதை எப்படி தவறென்பது? ஆனாலும் அதை சரியென்பதும் தவறே அல்லவா?
பரிதாபத்திற்குரிய தோற்றத்துடன் நின்றிருந்தவனை பார்த்தேன்.
“கண்ணா... பிள்ளை படிக்கறதுக்காக ஸ்கூலுக்கு போயிருக்கான்னு நம்பி உங்கப்பா அம்மா எங்கயோ உனக்காக உழைச்சுகிட்டு இருக்காங்க. இப்படி நீ என் முன்னாடி நின்னுகிட்டிருக்கறதைப் பாத்தா அவங்க எவ்ளோ வேதனைப் படுவாங்க. கொஞ்சம் யோசிச்சுப் பாரு. என் மகன் என் முன்னே இந்த நிலையில் நின்னா, அவனுக்கு என்ன சொல்வேனோ அதையே உனக்கும் சொல்றேன்.
இது மாதிரியான சிந்தனைகள் இந்த வயசுல எல்லோருக்கும் வரது சகஜம். உலகத்திலேயே தன் காதல்தான் புனிதமானது; தன் காதலி தான்/ காதலன்தான் அழகானவன்னு காதலிக்கும் ஒவ்வொருத்தரும் நினைச்சுப்பாங்க. அதுவும் இயல்பு தான்! இப்படி எல்லாம் இந்த வயசுல எண்ணம் வரலைன்னா தான் உடம்புல ஏதோ கோளாறுன்னு அர்த்தம். அதனால, நான் உன்னை எந்த குறையும் சொல்லப் போவதில்லை. அந்த பொண்ணு 450 மார்க்குக்கு குறையாம வாங்கக்கூடிய ரிசல்ட் வந்ததும், நல்ல ஸ்கூல்ல அட்மிஷன் கிடைத்துனா பிளஸ் ஒன் படிக்க போயிடுவா. உன் நிலைமையை நினைச்சுப் பாரு. நீ சுமாரா படிக்கறவன். பாஸ் மார்க் வாங்கவே தடுமாறிக்கிட்டு இருக்க. இனிமேலும் அவளையே நினைச்சுக்கிட்டு படிப்புல கவனம் இல்லாம இருந்தியானா அப்புறம் என்ன ஆகும்னு உனக்கே தெரியும். அவ உன்ன திரும்பியும் பார்க்க மாட்டா”
நல்லா புரிஞ்சிக்க. வாழ்க்கைல ஒவ்வொரு பருவத்திலயும் ஒவ்வொருத்தர் மேல ஈர்ப்பு வந்துட்டேதான் இருக்கும். ஆனா அதெல்லாம் நிலையானது இல்ல. நல்ல நிலைமைக்கு வந்த பிறகு சரியான வயசுல உனக்கான ஒருத்தியை தேர்ந்தெடுக்கறதுதான் புத்திசாலித்தனம். அதுக்கு இன்னும் குறைந்த பட்சம் 10 வருஷம் ஆகும். அதுக்குள்ளே உன் வாழ்க்கைல எத்தனையோ மாற்றங்கள் வரும். இப்ப உனக்கு வந்திருக்கறதுக்கு பேர் காதல் இல்லை. 3 வருஷமா தொடர்ந்து அவளை பார்த்துக்கிட்டே இருந்தததால வந்திருக்கிற இனக்கவர்ச்சி. இதையெல்லாம் காதல்னு நினைச்சு குழப்பிக்காதே. இறுதித் தேர்வுக்கு இன்னும் 3 மாசம்தான் இருக்கு. இப்ப ஆரம்பிச்சு, இனிமே ஒழுங்கா படிச்சாலும் சுலபமா பாஸ் பண்ணிடலாம். நான் சொல்றது புரியுதா?”
சுவரில் ஒரு பல்லியின் சத்தம். சொத்! சொத்!
“பார்த்தியா... பல்லி கூட சொல்லிடுச்சி. மேம் சொல்றது கரெக்ட்டு! வா போவோம்” என்று அவனை இழுத்துக்கொண்டு கிளம்பினான் பாலு!
மே 31. பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தது.
ஜூன் 1. இதழ்களில் புன்னகையுடனும் கரங்களில் இனிப்புடனும் வந்தாள் ரேவதி. ஸ்வீட் பாக்ஸ்-ஐ நீட்டினாள். கொஞ்சம் எடுத்து வாயில் வைத்தேன், தவிர்க்க இயலாமல் நினைவில் பிரசாத்! இரு பாடங்களில் தோல்வியைத் தழுவியிருந்த பிரசாத்!
அதற்கு பிறகு பிரசாத்தை நான் பார்க்கவேயில்லை.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, செப்-19ம் தேதி. தேர்வறையில் அமர்ந்திருக்கிறேன். வகுப்பறை வாசலில் நிழலாடியது. திரும்பிப் பார்த்தால் ஆச்சர்யப்படுத்தும் விதமாக பிரசாத் சகமாணவன் ஒருவனுடன். குறும்புத்தனம் முற்றிலும் தொலைந்துபோய்!
“ரிசுல்ட் வந்துடுச்சே” என்றேன். பாஸ் ஆகிட்டியா என்று கேட்க தயக்கம்.
“வந்துடுச்சு மேம். பாசாயிட்டேன்; ஐடெண்டிபிகேஷன் மார்க்ஸ் குறிச்சுட்டு வரச்சொன்னாங்க” என்றான்.
குறித்துத் கொடுத்துவிட்டு கேட்டேன்... “எப்படியிருக்கே கண்ணா?”
“எப்படி சந்தோஷமாயிருக்க முடியும் மேம்?”
ஒற்றை கேள்வியில் பல பதில்களை கொடுத்துவிட்டு போனாலும், என் மனதில் ஆறாத வடுவாய் பதிந்து விட்டான் பிரசாத்!
(மாணவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)
கட்டுரையாளர் - தொடர்புக்கு vijiraja1975@gmail.com
*****
| தி இந்து வலைத்தளத்தின் 'வலைஞர் பக்கம்' பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம் |
*****
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT