Published : 26 Sep 2013 04:32 PM
Last Updated : 26 Sep 2013 04:32 PM
டைட்டானிக்கைப் பற்றிப் பேசினால், எப்படி கேட் வின்ஸ்லெட் ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க முடியாதோ, அப்படி கோஸ்டா கன்கார்டியாவைப் பற்றிப் பேசினால், தவிர்க்க முடியாத பெயராகிவிட்டது ப்ரூலிங்.
ப்ரூலிங்?
கோஸ்டா கன்கார்டியா என்ற உல்லாசக் கப்பல் 2012 ஜனவரி 13-ல் கவிழ்ந்ததும் பிறகு 2013 செப்டம்பர் 17-ல் நிமிர்த்தப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். அப்படி அந்தக் கப்பலை நிமிர்த்துவதில் 500-க்கும் மேற்பட்டோர் நேரடியாக ஈடுபட்டனர். அவர்களில் 11 பேர் தங்களுடைய உயிரையும் துச்சமாக மதித்து அந்தக் கப்பலின் கட்டுப்பாட்டு அறையிலிருந்தே செயல்பட்டனர். அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தார். அவர்தான் 29 வயதான இங்கென் ப்ரூலிங். கடல் பொறியியல் பட்டதாரி.
தான் செய்ததைப் பெரிய சாகசமாகவோ சாதனையாகவோ கருதாமல், “எல்லாரும்தான் கப்பலை நிமிர்த்தக் காரணமாக இருந்தார்கள், அதில் நானும் ஒருத்தி” என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார். கிட்டத்தட்ட 19 மணி நேரம் இடைவிடாமல் பணியாற்றிக் கப்பலை நிமிர்த்தியிருக்கிறார்கள். அந்தப் பணி எப்படிப்பட்டது என்பதை, கப்பலைப் பற்றியும் கப்பலை நிமிர்த்தியபோது ஏற்பட்ட சோதனைகளையும் பற்றித் தெரிந்துகொண்டால் ஓரளவுக்குப் புரியும்.
டைட்டானிக் கப்பலைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். அந்தக் கப்பலைவிடப் பெரியது இந்த உல்லாசக் கப்பல். இதில் பயணிகளும் கப்பல் குழுவினருமாக சுமார் 4,200 பேர் இருந்தனர். இத்தாலியின் மேற்குக் கடலோரத்தில் வந்துகொண்டிருந்தபோது கிக்ளியோ தீவு அருகே தரை தட்டிக் கவிழ்ந்தது கன்கார்டியா கப்பல். இவ்வளவு பெரிய கப்பல் கவிழப்போகிறது என்று தெரிந்து, இரண்டு அல்லது மூன்று மணி நேர அவகாசத்தில் கப்பலில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட, 32 பேர் மட்டும் உயிரிழந்தார்கள். கப்பலின் எடை ஒரு லட்சத்து 14 ஆயிரம் டன். நீளம் 951 அடி. பயணிகளுக்கான தனியறைகள் மட்டும் 1,500. இதில் மிகப் பெரிய மருத்துவமனை, ஐந்து உணவகங்கள், 13 மதுக்கூடங்கள், நான்கு நீச்சல்குளங்கள் உள்ளன. அனைத்துப் பயணிகளும் பொதுவாகப் பார்த்து ரசிக்க மிகப் பெரிய திரையுடன் கூடிய திரையரங்கமும் உள்ளேயே இருக்கிறது. ஜெனிவாவைச் சேர்ந்த கோஸ்டா குரூஸ் நிறுவனத்துடையது இந்தக் கப்பல். 2006-ல் கட்டி வெள்ளோட்டம் விடப்பட்டது.
இப்போது மீட்புப் பணிக்கு வருவோம். கப்பலைத் தூக்கி நிமிர்த்த ஆயிரக் கணக்கான டன்கள் எடை கொண்ட ஆறு பெரிய மேடைகள் உருவாக்கப்பட்டன. அவற்றைக் கப்பல் கவிழ்ந்திருந்த இடத்துக்கு அருகே கொண்டுவந்தனர். கப்பலைக் கட்டி இழுக்க ஏராளமான இரும்புக் கம்பிகள் வடம்போலப் பயன்படுத்தப்பட்டன. நிக் ஸ்லோன் என்ற தென்னாப்பிரிக்கர்தான் இந்தப் பணிக்குத் தலைமை தாங்கினார். வழக்கமாகச் சிரிக்கச் சிரிக்கப் பேசும் அவர், இந்த 19 மணி நேரம் வேலையிலேயே கண்ணாக இருந்தார்.
வேலை தொடங்கியதும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. யார் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் மீட்புப் பணி பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தைவிட, மீட்க வந்தவர்களில் பலரை இழக்க நேருமோ என்ற அச்சமும் தொற்றிக்கொண்டது. காற்று சுழன்று வீசியது, கடல் சீறியது. கப்பல் மூழ்கிய நிலையில்கூட ஆடி அசைந்து அனைவரையும் பீதியில் ஆழ்த்தியது. இந்த நிலையில்தான் கப்பலின் கட்டுப்பாட்டு அறையில் கேப்டன் கொடுத்த ஆணைகளுக்கு ஏற்ப தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார் ப்ரூலிங். எல்லா சுவிட்சுகளும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தன.
கப்பல் வேலை என்றாலே ஆண்களுடைய ஆதிக்கம்தான். வேடிக்கையாகவும் கோபமாகவும் ஆபாசமாகவும் பேசிக்கொள்வார்கள். அதுவும் கடலோரத்தில் கப்பலைத் தூக்கும் வேலையைச் செய்யும்போது ஆங்காங்கே பெண்கள் அதும் இளம் பெண்கள் கண்ணில் பட்டபோதெல்லாம் மீட்புக் குழுவினரிடையே ஒருவிதப் போட்டியும் துடிப்பும் ஏற்பட்டது. அவர்களுடைய பேச்சு, சிரிப்பு, கேலி எதுவுமே ப்ரூலிங்குக்கு இடையூறாகவோ கவனிக்க வேண்டியதாகவோ இல்லை. அவருடைய கவனம் முழுக்கக் கப்பல் எப்போது தண்ணீரிலிருந்து நிமிரும் என்பதுதான்.
மீட்புப் பணிக்குப் பிறகு அவரைச் சந்தித்த நிருபர், “இன்றைய சாதனையின் வீராங்கனையாக உங்களைக் கருதலாமா?” என்று கேட்டார். “இது சாதனைதான். ஆனால், இதில் மற்றவர்களுக்குள்ள அளவே எனக்கும் பங்கு” என்று அடக்கமாகப் பதில் அளித்தார். மீட்புப் பணி முடிந்ததும் எல்லோரும் ஆளுக்கு இரண்டு மது போத்தல்களுடன் தடபுடலான விருந்தில் பங்கேற்றனர். ப்ரூலிங்குக்கு ஒரு மடக்கு பீர் மட்டும் போதுமானதாக இருந்தது!
தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT