Last Updated : 30 Sep, 2013 07:07 PM

 

Published : 30 Sep 2013 07:07 PM
Last Updated : 30 Sep 2013 07:07 PM

ஆய்வே உலகம் இவருக்கு!

மனிதர்கள் கொத்து கொத்தாக நோய்களில் செத்துப்போவது கடவுள் தரும் தண்டனை என பலகாலம் நம்பிக்கொண்டு இருந்தனர் மக்கள். ராபர்ட் ஹூக் நுண்ணுயிரிகளை மைக்ராஸ்கோப்பில் கண்டிருந்தாலும் நோய்களுக்கு இந்த கண்ணுக்கு தெரியாத ஜீவன்கள் காரணம் என யாரும் நினைக்கவில்லை.

திராட்சைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பீர் சீக்கிரம் கெட்டுப்போனது . விடாது ஆய்வு செய்தார் பாஸ்டர். நொதித்தலுக்கு காரணமான நுண்ணுயிரிகளைக் கண்டறிந்தார். நோய்களை பரப்பும் நுண்ணுயிரிகளை கண்டறிந்து நுண்ணுயிரி கோட்பாட்டை வெளியிட்டார். நொதித்தல் செயலுக்கு இந்த நுண்ணுயிரிகளே காரணம் என்றும் அவற்றை கண்ணால் காண முடியாது, மைக்ராஸ்கோப் கொண்டே அவற்றை காண முடியும் என்றும் சொன்னார்.

குறிப்பிட்ட வெப்பநிலையில் வாழும் அவற்றை கட்டுப்படுத்த வெப்பநிலையை மாற்ற வேண்டும் என்றும் சொன்னார். பாலை கெடாமல் காக்க நன்றாக சூடாக்கி உடனடியாக குளிர வைக்கும் [பாஸ்சரைசேஷன்] இவர் உருவாக்கியதே .

வெறிநாய்க்கடி மிகப்பெரிய சிக்கலை அக்காலத்தில் உண்டு செய்திருந்தது. வெறிநாய் கடித்தால் அந்த நாயை போலவே நடந்து கொண்டு, நீருக்கு பயந்து ஒடுங்கி இருந்து பரிதாபமாக மக்கள் இறந்து போனார்கள். 'நன்றாக பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடுபோட்டு சதையை கொத்தாக வெட்டி எடுத்தல்' என ரத்தம் உறைய வைக்கும் முறைகள் அந்த நோயை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டன. ஒன்றும் நடக்கவில்லை.

பாஸ்டர் பல நாய்களின் பின்னர் உயிரை பணயம் வைத்து திரிந்தார். அவற்றின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே நோய்க்கு காரணம் என்று உணர்ந்தார். நாயின் உமிழ் நீரை தானே உறிஞ்சி, மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் தாக்கப்பட்டு பதினான்கு இடங்களில் கடிபட்டிருந்த ஜோசஃப் மிஸ்டர் என்கிற ஒன்பது வயதுச் சிறுவனின் உடலில் செலுத்தி, பதினான்கு நாட்களில் அவனை குணப்படுத்தினார். ராபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி உருவானது.

மருத்துவர்கள் கையுறை அணிவது, அறுவை சிகிச்சை கத்திகளை ஸ்டெரிலைஸ் செய்வது ஆகியவற்றையும் இவர் வலியுறுத்தினார். உயிர் இழப்பை இதனால் அதிக அளவில் தடுக்க முடிந்தது .

ஆந்த்ராக்ஸ் நோயும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. கால்நடைகள் மொத்தமாக செத்து விழுந்தன. அந்த நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கொன்று, மீண்டும் அவற்றை மிருகங்களின் உடம்பில் செலுத்தி சாதித்தார் பாஸ்டர். ஐரோப்பா முழுக்க பட்டுபுழுக்கள் செத்துக்கொண்டு இருந்தன. நோய் வாய்ப்பட்ட பட்டு புழுக்களை பிரித்து வையுங்கள் என்று அவர் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்ட பட்டு உற்பத்தி மையங்கள் தப்பித்தன. இத்தாலி தேசத்து பட்டு உற்பத்தி நிறுவனத்துக்கு இவரின் பெயரையே சூட்டினார்கள்.

இவர் ஓயாமல் ஆய்வில் மூழ்கி உலகை மறந்திருந்தார். இது எந்த அளவுக்கு போனது என்றால் இவரை திருமண நாளன்று இவரைக் காணவில்லை. எங்கெங்கும் தேடிப்பார்த்தார்கள். ஆளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடிப்போய் விட்டார் என்று எண்ணிக்கொண்டு இறுதி முயற்சியாக அவரின் ஆய்வகம் நோக்கி போனார்கள். அங்கே கூலாக ஆய்வு செய்து கொண்டிருந்தார். “உனக்கு கல்யாணம் இன்னைக்கு!” என்று சொல்லி இழுத்துக்கொண்டு போனார்கள். தன்னலம் மறந்து மற்றவர்களுக்காக உழைத்தவர் அவர்.

செப்டம்பர் 28 - லூயி பாஸ்டர் நினைவு தினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x