Last Updated : 21 Sep, 2013 12:31 PM

 

Published : 21 Sep 2013 12:31 PM
Last Updated : 21 Sep 2013 12:31 PM

போலிகளுக்கு முற்றுப்புள்ளி!

மருந்து மாத்திரை விற்பனைக்காகத் தொலைக்காட்சிகளில் இரவு 10 மணிக்குப் பிறகு வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இங்கல்ல; அமெரிக்காவில் (உலகம் முழுக்கவே இன்றைக்கு இதுதான் பெரிய பிரச்சினைபோல இருக்கிறது!). தொலைக்காட்சி மருத்துவ விளம்பரங்களில் 10-க்கு 6 தவறாக வழிநடத்துபவையாக இருக்கின்றன என்பது அவர்களுடைய கருத்து.

சுகாதாரக் கொள்கைக்கான டார்ட் மௌத் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த ஏட்ரியான் பேர்பர், விஸ்கான்சின் பல்கலைக்கழக மாடிசன் மருந்தியல் கல்லூரியைச் சேர்ந்த டேவிட் கிரெளிங் ஆகிய இரு ஆய்வாளர்கள் இது தொடர்பாக ஆய்வுகளை நடத்தினர்.

டாக்டர்களுடைய மருத்துவப் பரிந்துரையுடனோ அல்லது பரிந்துரை இல்லாமலோ உட்கொள்ளப்படும் மருந்துகள் தொடர்பானவை இந்த விளம்பரங்கள். வாடிக்கையாளர்களுக்கு - அதாவது நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகள் குறித்துத் தகவல் தெரிவிக்கவா அல்லது தேவையே இல்லாவிட்டாலும் வாங்கிப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கவா இந்த விளம்பரங்கள் என்ற விவாதம் ஆய்வர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையில் கடந்த 15ஆண்டுகளாக நடந்துவருகிறது. இன்னும் முடிவுதான் எட்டப்படவில்லை (அவர்கள் ஊரில் பட்டிமன்ற நடுவர்கள் இல்லை போலிருக்கிறது).

2008 முதல் 2010 வரையில் ஒளிபரப்பப்பட்ட 168 மருத்துவ விளம்பரங்களை அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். இந்த விளம்பரங்களை உண்மையானவை, தவறானவை, தவறாக வழிகாட்டக்கூடியவை-ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாதவை என்று 3 ரகங்களாகப் பிரித்தனர். தகவல் ரீதியாகத் தவறானவை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாதவை என்ற ரகத்தில் ஒரு சதவீத விளம்பரங்கள்தான் இருந்தன ( தவறான விளம்பரங்கள் என்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்டிக்க அமெரிக்கச் சட்டம் இடம் தருகிறது). அதேசமயம், 60 சதவிகித விளம்பரங்கள் தவறாக வழிகாட்டும் விதத்தில்தான் இருந்தன.

முக்கியமான தகவல்களைத் தெரிவிக்காமலும், ஒரு விஷயத்தை மிகைப்படுத்தியும், தங்களுடைய கருத்தை ஏற்றியும், தேவையில்லாத விதத்தில் வாழ்க்கைமுறைக்கும் நோய்க்கும் தொடர்புபடுத்தியும் அந்த விளம்பரங்கள் இருந்தன.

டாக்டர்கள் பரிந்துரையின்றி வாங்கக்கூடிய மருந்துகள் விஷயத்தில்தான் தவறான வழிகாட்டல்கள் அதிக அளவில் இருந்தன. டாக்டர்கள் பரிந்துரைப்படி வாங்க வேண்டிய மருந்துகள் விஷயத்தில் 60% அளவும், டாக்டர்கள் பரிந்துரையின்றி நாமாகவே கடைகளில் கேட்டு வாங்கக்கூடிய மருந்துகளில் 80% அளவுக்கும் இந்தத் தவறான வழிகாட்டல்கள் இருந்தன. இப்போது தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைக் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.

நம்மூரிலும் இப்படி ஓர் ஆய்வு நடத்த வேண்டும். தவறாக 'வழிகாட்டும்' விளம்பரதாரர்கள் மீது நடவடிக்கை வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x