Published : 04 Apr 2014 05:53 PM
Last Updated : 04 Apr 2014 05:53 PM

ரயில் போக்குவரத்துக்காக ஏங்கும் தேனி மக்கள்!

# முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாததால், அணையில் சிறு பராமரிப்புப் பணியைச் செய்யக்கூட கேரள அரசு, தமிழகத்தை அனுமதிப்பது இல்லை. தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அணையைப் பார்வையிடக்கூட முடியாது. அதனால், முல்லைப் பெரியாறு அணை படிப்படியாகத் தமிழகத்தின் கையைவிட்டுச் செல்வதாக வேதனைப்படுகின்றனர் விவசாயிகள். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பது தேனி தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

# தற்போது தமிழகத்தில் ரயில் போக்குவரத்து இல்லாத ஒரே மாவட்டம் தேனி மட்டுமே. கடந்த 1928-ம் ஆண்டு முதல் மதுரையிலிருந்து தேனி வழியாக போடி வரை ரயில் போக்குவரத்து இருந்தது. அகல ரயில் பாதை அமைப்பதற்காக 2010-ம் ஆண்டு இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால், அகலப் பாதையும் இதுவரை அமைக்கப்படவில்லை. தமிழக, கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள தேனியில் ரயில் பாதைத் திட்டங்களை நிறைவேற்றினால், இரு மாநிலங்களுக்கு இடையே சுற்றுலா மற்றும் வர்த்தகம் வளர்ச்சி பெறும். திண்டுக்கல் - குமுளி ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று மக்கள் அரை நூற்றாண்டு காலமாகப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனால், இந்த திட்டம் வெறும் அறிவிப்போடு நிற்கிறது.

# தேனி மாவட்ட வனப் பகுதியில் யானை, சிறுத்தைப் புலிகள், காட்டு மாடுகள், புள்ளிமான், கடமான் உள்ளிட்ட அரிய விலங்குகள் உள்ளன. இந்த வனப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் போர்வையில் வேட்டைக் கும்பல் நுழைந்து, வன விலங்குகளை வேட்டையாடுகின்றன. வனப் பகுதியி்ல் மரங்கள் வெட்டி, கடத்தப்படுகின்றன. அழியும் வன வளத்தையும் விலங்கு களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

# திண்டுக்கல் - குமுளி நான்கு வழிச் சாலைத் திட்டம், மதுரை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம் ஆகியவை முடங்கிக்கிடக்கின்றன.

# தமிழகம் - கேரளாவுக்கு இடையே முக்கியப் போக்குவரத்துச் சாலையான போடி மெட்டு மலைச் சாலையில் மழைக் காலத்தில் மண்சரிவு, பாறைகள் விழுவது போன்ற பிரச்சினைகளால் அடிக்கடி போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. அதனால், போடி மெட்டு மலைச் சாலையின் கட்டமைப்பை மேம்படுத்தி மக்களின் பாதுகாப்பையும் தடையில்லாத போக்குவரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

# தமிழ்நாடு - கேரள மாநிலங்களை இணைக்கும் சாக்கலூத்து மெட்டுச்சாலை, காமராஜபுரம் - கிழவன்கோவில் மலைச் சாலை, போடி - அகமலை இணைப்புச் சாலை ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மலைக் கிராமங்களுக்குச் சாலை வசதிகள் இல்லை. கழுதைகள், குதிரைகள்தான் இன்னும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

# தேனி மாவட்டத்தில் பஞ்சு மில்கள், கயிறு தயாரிக்கும் குடிசைத் தொழில்கள் அதிகம். மின்வெட்டால் மேற்கண்ட தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

# தேனி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இல்லை. அதனால், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தேடி கேரளா, திருப்பூர், ஈரோடு மற்றும் சென்னைக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

# தொகுதியில் திராட்சை சாகுபடி பிரதான விவசாயமாக உள்ளது. விவசாயிகள் திராட்சைப் பழங்களைச் சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. திராட்சை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்பதும் விவசாயிகளுடைய நீண்ட நாள் கோரிக்கை. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும், திராட்சை ஆராய்ச்சி மையம் அமைப்பதாக வெறும் வாக்குறுதி மட்டும் வழங்கப் படுகிறது என்று குற்றம்சாட்டுகின்றனர் விவசாயிகள்.

# தொகுதியில் அனுமதி இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் புழக்கம் அதிகமாகிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

# எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அறிவித்த, மூல வைகை ஆற்றில் அணை கட்டும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

# இயற்கை எழில் நிறைந்த தேனி மாவட்டத்தில் சுற்றுலாத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப் படாததால், வைகை அணை, கும்பக்கரை அருவி, குரங்கணி அருவி ஆகிய பகுதிகளின் சுற்றுலாத் திட்டங்கள் கனவாக உள்ளன. இந்த அருவிகளுக்கு கேரளா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x