Published : 23 May 2021 05:50 AM
Last Updated : 23 May 2021 05:50 AM
சித்த மருத்துவ கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் குறைவு ஏற்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவை அதிகரிக்க கிராம்பு குடிநீர் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது என சேலம், நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பலர் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மோசமான நிலையை அடைகின்றனர். இதனால், ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையங்களில், கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் குறைவு ஏற்படும் நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் அளவை அதிகரிக்க தற்போது கிராம்பு குடிநீர் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சேலம், நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி கூறியதாவது: கரோனா தொற்றினால்பாதிக்கப்படுபவர்களில் தற்போது ஆக்சிஜன் குறைவால் பலர் மோசமான உடல்நிலையை அடைகின்றனர். விழுப்புரம் பெரும்பாக்கம் கரோனா சிகிச்சை மையத்தில் கரோனா நோயாளிகளுக்கு கிராம்புகுடிநீர் கொடுக்கப்பட்டதில் அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு அதிகரிப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே, ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டவர்களுக்கு, சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் தற்போது கிராம்பு குடிநீரையும் வழங்கி சிகிச்சை அளிக்கிறோம். இதை தொடர்ந்து பருகி வரும் கரோனா நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் அளவு அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, சேலம் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், கரோனா நோயாளிகளுக்கு கிராம்பு குடிநீர் தற்போது சிகிச்சை மருந்தாக வழங்கப்படுகிறது. கிராம்பு குடிநீர் தயாரிக்க கிராம்பு 10 கிராம், ஓமம் 20 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், மிளகு 10 கிராம், இஞ்சி 10 கிராம், அதிமதுரம் 20 கிராம் ஆகியவை தேவைப்படும்.
ஒரு வேளைக்கு 250 மில்லி தண்ணீருடன் கூட்டு மருந்து பொடிகளின் அளவு 80 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, 60 மில்லியாக காய்ச்சி எடுக்க வேண்டும். இக்குடிநீரை, 10 நிமிடத்துக்கு ஒரு முறை இரண்டு தடவை, நோயாளிகளுக்கு பருகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT