Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM
’திமுகவைப் போன்ற வாரிசு அரசியல் நாட்டுக்கு நல்லதல்ல’ என்று, திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தோவாளை, திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி, நாங்குநேரி, குறிச்சி ஆகிய பகுதிகளில் முதல்வர் பழனிசாமி நேற்று காலை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
திமுகவில் கருணாநிதிக்கு பின்பு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி வந்துள்ளார். இதுபோன்ற வாரிசு அரசியல் நாட்டுக்கு நல்லதல்ல. திமுக ஒரு குடும்ப கட்சி. அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் கட்சியில் உயர் பதவிக்கு வருவார்கள்.
மத்தியில் ஆட்சியில் பங்கு வகிக்கும்போதும் அமைச்சர் பொறுப்பை அவர்களின் குடும்பத்தினர்தான் பெறுவார்கள். ஆனால், அதிமுகவில் உழைத்தால் தொண்டரும் முதல்வர் உள்ளிட்ட உயர்ந்த எந்த பதவிக்கும் வரமுடியும்.
இயற்கை சாதகம்
குடிமராமத்து திட்டத்தால் மழைநீர் வீணாகவில்லை. வருண பகவான் கருணையால் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. கடவுளும் நம் பக்கம், இயற்கையும் நம் பக்கம். நீர்நிலைகள் நிரம்பியதால் அதிக விளைச்சல் கிடைத்திருக்கிறது. இதற்காகவும், நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தியதற்காகவும் தேசிய விருதை தமிழக அரசு பெற்றுள்ளது.
அதிமுக ஆட்சியில் அதிகமான கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. 3 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
மின்மிகை மாநிலம்
திமுக ஆட்சியில் தமிழகம் மின்வெட்டால் இருண்டு கிடந்தது. ஆனால், தற்போது நாட்டிலேயே மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்துள்ளோம்.
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களிலும் கலந்துகொண்டேன். இதுவரை தமிழக முதல்வர்கள் யாரும் இவ்வாறு இருந்ததில்லை. தமிழகம் வெற்றிநடை போடுகிறது.
மீனவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமையும் என்று எதிர்க்கட்சிகள் பொய் கூறுகின்றன. அத்திட்டம் அமையாது. ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இருக்கும்போது 13 அமைச்சர்கள் மீது வழக்கு போடப்பட்டு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், அதிமுக மீது திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துகிறார். மக்களை குழப்பி ஆட்சிக்கு வர துடிக்கிறார். இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT