Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

670 படுக்கை வசதிகளுடன் - கரோனா பராமரிப்பு மையங்கள் : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தகவல்

பாளையங்கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்தில் 100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 670 படுக்கை வசதிகளுடன் கரோனா பராமரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று ஆட்சியர் விஷ்ணு கூறினார்.

கரோனா இரண்டாம் கட்ட பரவலையொட்டி திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் மற்றும் கரோனா பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை, மகாராஜா நகர் மற்றும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் கரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அவற்றை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார். அங்கு கரோனா நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் இருப்பு நிலை குறித்தும், படுக்கை வசதிகளின் தயார்நிலை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து திருநெல்வேலி மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காய்ச்சல்கண்டறியும் சிறப்பு முகாமைபார்வையிட்டார்.ஆட்சியர் கூறும்போது, “பாளையங்கோட்டை மகாராஜா நகர் மாநகராட்சி திருமணமண்டபம் மற்றும் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தலா 100 படுக்கை வசதிகளுடனும், சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடனும், எப். எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடனும், முக்கூடல் பீடி தொழிலாளர் மருத்துவமனையில் 170 படுக்கை வசதிகளுடனும் கரோனா பராமரிப்பு மையம் தயாராகி வருகிறது.

மேலும், மாநகராட்சி பகுதிகளில் 11 , புறநகர் பகுதிகளில் 42 சிறப்பு காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இங்கு ஏராளமான பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் போர்க்காலஅடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றி கரோனா பரவலைத் முற்றிலுமாக தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

ஆய்வின்போது, நகர் நல அலுவலர் சரோஜா, மாநகராட்சி உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், சுகாதாரஆய்வாளர் நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x