Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM

பரிசோதிக்காமல் செலுத்திய ரத்தத்தால் எச்ஐவி பாதிப்பு சாத்தூர் பெண் பணிக்கு செல்ல பைக் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

அரசு மருத்துவமனையில் தவறாக ரத்தம் செலுத்தியதால் எச்ஐவி பாதிப்புக்கு ஆளான பெண் அரசுப் பணிக்கு செல்ல பைக் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக் கறிஞர்கள் அப்பாஸ்மந்திரி, முத்துக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தனித் தனியாக தாக்கல் செய்த மனு:

சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பி ணிக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 2018-ல் தவறுதலாக எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் தானமாகப் பெற்ற ரத்தத்தை முறையாகப் பரிசோதிக்காமல் பெண்ணுக்கு செலுத்தியுள்ளனர். எனவே பாதுகாப்பான முறையில் ரத்தம் பெற உபகரணங்களை வழங்கவும், தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்தச் சேகரிப்பு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஜனவரியில் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜூலையில் விசாரணைக்கு வந்தபோது, தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 450 சதுர அடிக்குக் குறையாமல் 2 படுக்கை அறையுடன் சுற்றுச்சுவருடன் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் பாதிக்க ப்பட்ட பெண் காணொலிக் காட்சியில் ஆஜரானார். அப் போது அவர் நீதிபதிகளிடம் கூறுகையில், நான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னிடம் பேசினாலோ, என்னை தாண்டிச் சென்றாலோ எச்.ஐ.வி. பரவிவிடுமோ எனப் பயப்படுகின்றனர். பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க என்னை அனுமதிப்பதில்லை. எனவே என் வீட்டுக்கு தனியாக குடிநீர் குழாய் இணைப்பை வழங்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து இக்கோரிக் கையை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எச்.ஐ.வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தர விட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண், காணொலிக் காட்சியில் ஆஜராகி, தான் தினமும் பேருந்தில் வேலைக்குச் செல்வதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அப்பெண்ணுக்கு வேலைக்குச் செல்ல இரு சக்கர வாகனம் வழங்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x