Published : 31 May 2021 03:13 AM
Last Updated : 31 May 2021 03:13 AM
பெருந்துறை அரசு மருத்துவ மனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளவர்களில் தகுதியானவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ஒப்பந்தப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் எம்பி சுப்பராயன் மூலமாக வழங்கப்பட்ட இம்மனுவில் கூறியுள்ளதாவது:
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தற்போது தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் 300 -க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
இதில், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆண், பெண் செவிலியர் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களும் அடங்குவர்.
இவர்களுக்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் கூட வழங்கப் படுவதில்லை. பி.எப், இஎஸ்ஐ உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிர்வாகம் செலுத்த வேண்டிய பங்குத் தொகையையும் தொழிலாளர்களிடமே பிடித்தம் செய்து வருகின்றனர். அந்த தொகையும் முறையாக செலுத்துவதில்லை. பிடித்தங்கள் போக நாளொன்றுக்கு சுமார் ரூ.300 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
எனவே, இவர்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், இவர்களில் தகுதியானவரை பணி நிரந்தரம் செய்யவும், நிரந்தரமற்ற பணியாளர்களுக்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தொழிலாளர்களில் பலர் கரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது, ஓய்வு அளிப்பது, பாதுகாப்பு சாதனங்களை முறையாக வழங்குவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT