Published : 29 May 2021 03:13 AM
Last Updated : 29 May 2021 03:13 AM
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 கூடுதல் படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை பிரிவினை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.
பெருந்துறையில் செயல்படும் ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 550 படுக்கைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு மட்டுமல்லாது சேலம், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர். இதன் காரணமாக கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய படுக்கை வசதிகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
பெருந்துறை அரசு மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 850 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், கூடுதலாக 300 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். இத்துடன் வட்டார அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 150 படுக்கைகளும், ஈரோட்டில் 350 படுக்கைகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆக்சிஜன் வசதிகளுடன் அமைக்கப் பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் 4000 படுக்கை வசதி உள்ளது. நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாத சூழ்நிலையில், கரோனா சிகிச்சை மையங்களில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் தானாக முன்வந்து சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணி, துணை முதல்வர் ஏ.சந்திரபோஸ், அறுவை சிகிச்சை துறைத்தலைவர் எஸ்.செந்தில்குமார், பொது மருத்துவத்துறை உதவி பேராசிரியர் பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT