Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

2020- 2021-ம் நிதியாண்டில் - வஉசி துறைமுகம் ரூ.113.72 கோடி வருவாய் ஈட்டி சாதனை :

தூத்துக்குடி வஉசி துறைமுக கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் இருந்து ராட்சத கிரேன்கள் மூலம் நிலக்கரி இறக்கப்படுகிறது.

தூத்துக்குடி

கரோனா பரவலுக்கிடையில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் 2020- 2021-ம் நிதியாண்டில் ரூ.113.72 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் (2020- 2021) 31.79 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது 2019-2020-ம் நிதியாண்டில் கையாளப்பட்ட 36.08 மில்லியன் டன் சரக்குகளுடன் ஒப்பிடுகையில் 11.89 சதவீதம் குறைவாகும். 2020-2021-ம் நிதியாண்டில் மொத்தம் 7.62 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய நிதியாண்டு கையாண்ட அளவான 8.04 லட்சம் சரக்கு பெட்டகங்களுடன் ஒப்பிடுகையில் 5.22 சதவீதம் குறைவு.

வஉசி துறைமுகத்தின் 2020-2021-ம் நிதியாண்டு இயக்க வருவாய் ரூ.549.51 கோடி. முந்தைய 2019-2020 நிதியாண்டு இயக்க வருவாய் ரூ.582.90 கோடியாக இருந்தது. 2020-2021 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ.322.63 கோடி. முந்தைய 2019-2020 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ.328.71 கோடியாக இருந்தது. 2020-2021 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.113.72 கோடி ஆகும். முந்தைய 2019-2020 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு நிகர உபரி வருவாய் ரூ.135.23 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டைவிட நிகர வருவாய் ரூ.21.51 கோடி குறைந்துள்ளது.

புதிய திட்டங்கள்

வஉசி துறைமுகத்தில் ரூ.64.15 கோடி செலவில் வடக்கு சரக்கு தளம்-3-ஐ 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி தொடங்கும் நிலையில் உள்ளது. மேலும் 49 மீட்டர் அகலமும் மற்றும் 366 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய வகை கப்பல்கள் வருவதற்கு வசதியாக துறைமுக நுழைவு வாயிலை 152.40 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி ரூ.15.24 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஒரு மணி நேரத்தில் 100 சரக்குபெட்டக வாகனங்களை ஸ்கேன்செய்யும் வசதி ரூ.47 கோடி செலவில் நிறுவும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. 5 மெகாவாட் சூரியமின் சக்தி ஆலை ரூ.19.81 கோடிசெலவில் நிறுவப்பட உள்ளது.துறைமுக பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க 2,000 ஏக்கர் நிலப்பகுதியை துறைமுகம் ஒதுக்கியுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த 2,271 இந்தியர்கள் இந்தியகடற்படை கப்பல்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வழியாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். கரோனா அறிகுறியுடன் காணப்படுவோரை தனிமைப்படுத்த துறைமுக கட்டிடங்களில் ரூ.20 லட்சம்செலவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக 54 படுக்கை வசதிகளுடன் கூடிய 19 வார்டுகள் ரூ.25 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x