Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM
கரோனா பரவலை தடுக்க தமிழகஅரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. வாரச்சந்தைகள் மற்றும் இதர கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் வாரம்தோறும் புதன்கிழமை நடைபெறும்வாரச்சந்தை நேற்று வழக்கம்போல காலையில் கூடியது. பொருட்கள் வாங்க மக்கள் பெருமளவில் குவிந்தனர். இதனால் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் சுஜீத் ஆனந்து, உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சந்தையின் முன்கேட்டை அடைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பொதுமக்களோ, அத்தியாவசிய பொருட்கள் வாங்கத்தானே நிற்கிறோம் என்று வாதாடினர்.
வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் அங்கு வந்து வியாபாரிகளை காலி செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால்,யாரும் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து சந்தையை உடனடியாக மூடும்படி உத்தரவிட்டதுடன், சந்தை ஒப்பந்தகாரர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அதன்பின்னர் வியாபாரிகள் ஒவ்வொருவராக கடையை காலி செய்துவிட்டு கலைந்து சென்றனர். பகல் 12 மணிக்குள் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
சந்தை கிடையாது
இதுகுறித்து வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, “பலசரக்கு, காய்கறி, மீன், இறைச்சி கடைகளுக்கு பகல் 12 மணி வரை ஊரடங்கில் தளர்வு என்பதை காரணம் காட்டி, வியாபாரிகள் செய்துங்கநல்லூர் சந்தையில் குவிந்துவிட்டனர். எதிர்பாராத விதமாக நடந்தஇந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுத்து, சந்தை ஒப்பந்தகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமை சந்தை நிச்சயம் கிடையாது. பொதுமக்கள் யாரும் சந்தைக்கு வரவேண்டாம்” என்றார் அவர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT