Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

முழு ஊரடங்கு காரணமாக - ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை : விலக்கு அளிக்க மஞ்சள் வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு

முழு ஊரடங்கு காரணமாக ஈரோடு மஞ்சள் சந்தைக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்தவாரம் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளில் இருந்து விலக்கு அளித்து, மஞ்சள் ஏல விற்பனை தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மஞ்சள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. இரு மாதங்களுக்கு முன்னர் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.10 ஆயிரத்தைத் தொட்ட நிலையில், தற்போது சராசரியாக குவிண்டாலுக்கு ரூ.8000 ஆயிரம் முதல் ரூ.9000 ஆயிரம் வரை விலை கிடைத்து வருகிறது. கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால், மஞ்சள் விலையில் எதிர்பார்த்த ஏற்றம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தங்களிடம் இருப்பில் உள்ள மஞ்சள் மற்றும் அறுவடை செய்யப் பட்ட புது மஞ்சளை விவசாயி கள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மஞ்சளை அறுவடை செய்தல், அதனைப் பதப்படுத்துதல், மஞ்சளை விற்பனைக்கும், கிடங்குகளில் இருப்பு வைக்கவும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மஞ்சள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அறுவடை செய்த புதிய மஞ்சளை பாதுகாப்பாக வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மஞ்சள் கிருமி நாசினி என்பதால், மருந்து உற்பத்தி மற்றும் மளிகை தேவைக்கு தொடர்ந்து தடையின்றி அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் மஞ்சள் சந்தைக்கு விலக்கு அளித்து ஏலம் நடைபெற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x