Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM

நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட - பூசாரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் :

திருநெல்வேலி அருகே சீவலப்பேரியில் பூசாரி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனைமுன் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி அருகே சீவலப்பேரியில் பூசாரியை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சீவலப்பேரியில் நேற்றுமுன்தினம் கொலை செய்யப்பட்ட சுடலைமாடசுவாமி கோயில் பூசாரி சிதம்பரம் (45)என்பவரின் சடலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு யாதவ மகாசபை இளைஞரணி செயலாளர் பொட்டல்துரை தலைமையில் சிதம்பரத்தின் உறவினர்கள் மற்றும் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் திரண்டு நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சிதம்பரத்தின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீஸார் அங்குவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீஸார் உறுதி அளித்ததை அடுத்து 1 மணிநேரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x