Published : 06 Jun 2021 03:13 AM
Last Updated : 06 Jun 2021 03:13 AM

நடப்பு குறுவை பருவத்தில் - ஈரோட்டில் 4600 ஹெக்டரில் நெல் சாகுபடி : வேளாண் இணை இயக்குநர் தகவல்

கோபியை அடுத்த மேவானி கிராமத்தில் நெல் இயந்திர நடவுப் பணியினை வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு

நடப்பு குறுவை பருவத்தில், ஈரோடு மாவட்டத்தில் 4600 ஹெக்டரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட உள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் குறுவை நெல் சாகுபடி நடவுப் பணிகள் தொடங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செம்மை நெல் சாகுபடி குறித்த செயல் விளக்கங்களும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோபியை அடுத்த மேவானி கிராமத்தில் நெல் இயந்திர நடவுப் பணியினை வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

செம்மை நெல் சாகுபடி முறையில் (ஒற்றை நாற்று நடவு முறை) நெல் நடவு செய்வதன் மூலம் குறைந்த அளவு விதை நெல் போதுமானது. நடவு ஆட்கள் தேவை குறையும்.

மேலும், இளவயது நாற்றுகளை சரியான இடைவெளியில் நடுவதால், பயிர்களுக்கு இடையே காற்றோட்டம் மற்றும் பராமரிப்பு அதிகரித்து, அதிக தூர் கட்டுதல் மற்றும் அதிக மணிகள் பிடித்து மகசூல் அதிகரிக்கும்.

மேலும் மொத்த நெல் சாகுபடி பரப்பில் 80 சதவீதம் பரப்பளவில் செம்மை நெல் சாகுபடி முறையை அறிமுகப்படுத்த விவசாயிகளிடம் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர வரப்புகளில் உளுந்து மற்றும் தட்டைப்பயறு போன்ற பயறுவகைகளை, பயிரிடுவதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைக்கு உதவுகிறது.

குறுவைப் பருவத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் பரிந்துரைத்துள்ள ஏ.எஸ்.டி. - 16, டி.பி.எஸ் - 5, ஏ.டி.டி.-45 போன்ற குறுகிய கால வயதுடைய ரகங்கள் தற்போது நடவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் இதுவரை மொத்தம் 55 மெட்ரிக் டன் அளவு விதை நெல் மானிய விலையில் உழவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு குறுவை பருவத்தில், ஈரோடு மாவட்டத்தில், 4600 ஹெக்டரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர்கள் அசோக், அ.நே.ஆசைத்தம்பி, சிவக்குமார், உதவி இயக்குநர் வே.ஜீவதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x