Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM

பெருந்துறை அரசு மருத்துவமனையில் - கூடுதலாக 200 படுக்கைகள் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடக்கம் : மரக்கன்றுகளை நடவு செய்த அமைச்சர் முத்துசாமி

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்ததினத்தையொட்டி, பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நடந்த விழாவில் அமைச்சர் சு.முத்துசாமி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

ஈரோடு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி 1000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 932 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்புப் பணிகளுக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன. ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 400 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கூடுதலாக நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, 400 படுக்கைகள் கொண்ட மருத்துவ வளாகப் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் சு.முத்துசாமி, கூடுதலாக 200 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடத்திற்கு பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார். அப்போது, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஒளிரும் ஈரோடு அமைப்பின் சார்பில் 25 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் நிஹார் ரஞ்சன், ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன், வனச்சரக அலுவலர் ந.ரவீந்திரநாத், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x