Published : 23 May 2021 05:51 AM
Last Updated : 23 May 2021 05:51 AM
சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த 11 தொகுதிகளிலும் பணிபுரிந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவது மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்துப் பேசியதாவது:
கரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனை ஜீரோ அளவில் கொண்டு வரும் வரை அதிகாரிகள் பணிபுரிய வேண்டும்.
மக்கள் தேவையின்றி பொது இடங்களில் கூட்டம் கூடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்காக, சிறப்பு அதிகாரிகளாக, சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பணிபுரிந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள், சிபாரிசுகளை ஏற்காமல் முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சுதந்திரமாக செயல்பட வேண்டும். தமிழக முதல்வரின் அறிவிப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும். காய்கறி சந்தைகள் முற்றிலும் மூடப்பட வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக, மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், ஆட்சியர் கார்மேகம், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், எஸ்பி தீபா காணிகர், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், மேட்டூர் துணை ஆட்சியர் சரவணன், சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT