Published : 22 May 2021 03:13 AM
Last Updated : 22 May 2021 03:13 AM

இரும்பாலையில் ஆக்சிஜன் வசதியுடன் - கூடுதலாக 500 படுக்கைகள் அமைப்பதற்கான பணிகள் தீவிரம் : மின் துறை அமைச்சர் ஆய்வு

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 500 படுக்கை வசதிகள் கொண்ட மையம் அமைப்பதற்கான பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். உடன் ஆடசியர் கார்மேகம், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர்.

சேலம்

சேலம் இரும்பாலையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணியை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதலாக 500 படுக்கை வசதிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் கூறியதாவது:

கரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்திட சேலம் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 966 படுக்கைகளும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 617 படுக்கைகளும் என 1,583 படுக்கைகள் உள்ளன. மேலும், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2,896 படுக்கைகள் உள்ளன.

சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அப்போது, மையத்தை விரிவாக்கம் செய்து கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் 10 நாட்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து முதல்வர் உத்தரவுப்படி கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் பணிகள் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விரிவாக்கப் பணியால் ஒரே இடத்தில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு, இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக உருவாக்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆலோசனையின்போது ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x