Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

சேலம் அரசு மருத்துவமனையில் தங்கிய - கரோனா நோயாளிகளின் உறவினர்கள் வெளியேற்றம் : தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் உறவினர்கள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என நேற்று மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நோயாளிகளின் உறவினர்கள். படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் உறவினர்கள் சுகாதாரப் பாதுகாப்பு கருதி வெளியேற்றப் பட்டனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 900-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவு தவிர பிற இடங்களில் கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில், கரோனா நோயாளிகளின் உறவினர்கள் அவசர உதவிகளுக்காக மருத்துவ மனை வளாகத்தில் ஆங்காங்கே தங்கியிருந்தனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது.

இதனிடையே, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு வருவதும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் அரசு மருத்துவமனை வளாகத்தில், சமூக இடைவெளியின்றி மக்கள் நடமாடும் நிலை உருவானது.

இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்த நோயாளிகளின் உறவினர்கள் அனைவரையும் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனை ஊழியர் களுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். பின்னர், நோயாளிகளின் உறவினர்கள் பலர், அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். ஒரு சிலர் மட்டும் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்தனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக மருத்துவ மனை நிர்வாகத்தினர் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்த உறவினர்களில் யாருக்காவது தொற்று பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. மேலும், கரோனா நோயாளிகள் வந்து செல்லக் கூடிய இடத்தில், மற்றவர்கள் தங்கியிருக்கும்போது, அவர்களுக்கும் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம்.

தொற்றால் உறவினர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, அவர்களை மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேற செய்தோம். சிகிச்சை பெறுவோ ருக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்டவைகளை ஊழியர்களே வழங்கி வருகின்றனர். எனவே, நோயாளிகள் குறித்த கவலை அவர்களது உறவினர்களுக்கு தேவையில்லை, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x