Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதை முன்னிட்டு, மளிகைக் கடைகளில் வழக்கத்துக்கு மாறாக நேற்று மக்கள் கூட்டம் அதிகரித்தது.
கரோனா தொற்றுப் பரவலின் 2-வது அலை காரணமாக தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்க நாளை (10-ம் தேதி) தொடங்கி 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், நேற்றும், இன்றும் (9-ம் தேதி) காலை முதல் இரவு வரை அனைத்துக் கடைகளையும் திறக்கவும், இருநாட்கள் பேருந்துகளை இயக்கவும் அரசு அனுமதியளித்தது.
முழு ஊரடங்கு தொடங்கும் முன்னர் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்க நேற்று காலை முதல் ஆர்வமுடன் கடைகளில் குவிந்தனர். சேலத்தில் மளிகைப் பொருட்கள் மொத்த விற்பனைப் பகுதியான செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட், லீ பஜார் உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட மக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அதிகரித்தது.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “முழு ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டால், வெளியே நடமாடுவதில் பிரச்சினை ஏற்படும். பேருந்து சேவை இருக்காது என்பதால், மளிகைக் கடைகள் திறந்திருந்தாலும், அண்டை கிராமங்களில் இருந்து சேலத்துக்கு வந்து செல்வது சாத்தியமாக இருக்காது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மளிகைப் பொருட்களை வாங்கிச் செல்ல வந்தோம்” என்றனர்.
இதனிடையே, வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இருப்பதைப் பயன்படுத்தி, வியாபாரிகளும் தங்கள் கடைகளில் விற்பனைக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதேபோல, ஜவுளி, மின் சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
தருமபுரியில் மக்கள் கூட்டம்
தருமபுரி மாவட்டத்திலும் நேற்று கடைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. கடைகளுக்கு வருவோரில் பலரும் முகக்கவசம் அணிந்திருந்தபோதும் வர்த்தக மையங்களின் முன்பு சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பல கடை நிர்வாகங்கள் வலியுறுத்தியபோதும்கூட, நுகர்வோர் பொருட்களை வாங்கிச் செல்வதை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT