Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM

அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு - தட்டுப்பாடில்லாமல் ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தனியார் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், தனியார் மருத்துவமனை பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ராமன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் ராமன் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 50 சதவீதம் படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் மாவட்டத்தில் 35 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை, ஆத்தூர், ஓமலூர் மற்றும் எடப்பாடி அரசு மருத்துவமனைகளில் 244 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உருளைகள் இருப்பில் உள்ளது. மேலும், அனைத்து மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்பசுகாதார நிலையங்களிலும் 239 எண்ணிக்கையிலான சிறிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு கலனில் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் உள்ள 800 படுக்கைகளில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது. மீதமுள்ள 250 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது.

தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு நாளைக்கு 22,000 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு மருத்துவமனையின் தேவைக்கு ஏற்ப தினந்தோறும் ஆக்சிஜன் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டால், உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டால் உடனடியாக நிலைமை சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கரோனா பற்றிய தகவல் ஏதேனும் பொதுமக்கள் பெற எண்ணினால் 0427-2450498, 0427-2450022, 9154155297 மற்றும் உதவி மையம் - 104, 1077 என்ற 24 மணி நேரமும் செயல்படும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) (பொ) வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x