Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM
உடலுக்கு உடற்பயிற்சி புத்துணர்வு தருவதுபோல் புத்தக வாசிப்பு மூளைக்கும். உள்ளத்துக்கும் உகந்தது என்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கா. பிச்சுமணி தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக புத்தக தின விழாவில் அவர் பேசியதாவது:
கலைமகளும் திருவள்ளுவரும் ஏடு வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. ஆனால், இன்றைய இளைஞர்கள் தொலைக்காட்சி, ஊடகம்,இணையம் என்று சதா சர்வ காலமும் அவற்றில் பொழுதை முழுவதும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். புத்தகம் வாசிப்பு குறைந்து வருகிறது.
புத்தகம் வாசிக்கும்போதுதான் ஐம்புலன்களும் ஒருங்கிணைந்து இன்பம் அடைகிறது. மூளை வளர்ச்சி அடைகிறது. புத்தகம் வாசித்த பிறகு அதனுடைய கருத்தை அசைபோட முடியும். உடற்பயிற்சி உடலுக்கு நன்மை தரும். புத்தகம் வாசிப்பு மூளைக்கும், உள்ளத்துக்கும் முக்கியமானது. இணையத்தில் பல்வேறு தகவல்களை வேகமாக பார்க்க வேண்டும். ஆனால், புத்தகத்தில் ஒரு தனிப்பட்ட செய்தி விவரமாக, முழுமையாக கிடைக்கும்.
புத்தகம் வாசிக்கும்போது பரந்த எண்ணமும் விரிந்த அறிவுத்திறனும் ஏற்படுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் அதிகமாக புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் துணையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பல்கலைக்கழக நூலகத்துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ஜான் கென்னடி சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழக நூலக துறைத்தலைவர் ப. பாலசுப்பிரமணியன் எழுதிய ' உலகை ஆளும் தமிழர்கள் ' என்ற நூலை துணைவேந்தர் வெளியிட்டார். மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் அ. மரியசூசை பெற்றுக்கொண்டார். முனைவர் கோ. கணபதி சுப்பிரமணியன் நூலை விமர்சித்து உரையாற்றினார். தொடர்ந்து தமிழகஅரசின் சிறந்த வாசகர் வட்டவிருது பெற்ற திருநெல்வேலி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டநிர்வாகிகளுக்கு பாராட்டு விழாநடைபெற்றது. நூலகர் முனைவர் திருமகள் நன்றி கூறினார்.
புத்தகம் வாசிப்பு மூளைக்கும், உள்ளத்துக்கும் முக்கியமானது. புத்தகம் வாசிக்கும்போது பரந்த எண்ணமும் விரிந்த அறிவுத்திறனும் ஏற்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT