Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்துமனோ (27) கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அவரது உறவினர்களும், சமுதாய அமைப்பினரும் 8 மணி நேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் கைதிகளுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மோதலில் திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த பாபநாசம் மகன் முத்துமனோ கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, தாழையூத்தை சேர்ந்த ஜேக்கப், ராமமூர்த்தி, மகாராஜன், பல்லிக்கோட்டை மாடசாமி, கொக்கி குமார், வைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரைச் சேர்ந்த கண்ணன், அருண்குமார் ஆகிய 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
இதுதொடர்பாக, மத்திய சிறையில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருநெல்வேலி நீதிமன்ற 1-வது நீதித்துறை நடுவர் பாபு தனியாக விசாரணை நடத்தினார்.
முத்துமனோவின் உறவினர்கள், தமிழர் விடுதலை களம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் வாகைக்குளம் கிராம மக்கள் 200-க்கும்மேற்பட்டோர் பாளையங்கோட்டை மத்திய சிறை முன் நேற்று காலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருநெல்வேலி- நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
`முத்துமனோ கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மத்திய சிறையில் சாதி அடிப்படையில் செயல்படும் சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்ற கைதிகளை பார்வையிட அனுமதிக்க வேண்டும். கொலையாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என்று அவர்கள் வலியுறுத்தினர்.
ஆட்சியர் பேச்சுவார்த்தை
திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார், எஸ்பிக்கள் மணிவண்ணன் (திருநெல்வேலி), சுகுணாசிங் (தென்காசி), மாநகர காவல் துணை ஆணையர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் மத்திய சிறை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய மறியல் பல மணி நேரம் நீடித்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.முத்துமனோவின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். நீதித்துறை நடுவர் விசாரணைக்குப்பின் அந்த அறிக்கை அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிரேதப் பரிசோதனையின் போது இறந்தவர் தரப்பில் வழக்கறிஞர் ஒருவர் உடனிருக்கலாம் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 8 மணி நேரம் நீடித்த மறியல் மாலை 4.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT