Published : 18 Apr 2021 03:19 AM
Last Updated : 18 Apr 2021 03:19 AM

நெல்லை அருகே 8 ஆண்டுகளுக்குப் பிறகு - 400 ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி : கிணற்றுப் பாசனத்தை நம்பி களம் இறங்கிய விவசாயிகள்

வி.எம். சத்திரம் அருகே உள்ள ஆரோக்கியநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவ நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன . நடவு செய்வதற்காக பவர் டில்லர் மூலம் விவசாயி நிலத்தை உழும் நிலையில், அவரை சுற்றி வட்டமடித்து மும்முரமாக இரை தேடும் கொக்குகள். படம்: மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி அருகே 8 ஆண்டுகளுக்குப் பிறகு 400 ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கிணற்றுப் பாசனத்தை முழுமையாக நம்பி களமிறங்கியிருப்பதாக விவசாயிகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலியை அடுத்துள்ள வி.எம். சத்திரம், ஆரோக்கியநாதபுரம், நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் தற்போது கோடை பருவ நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. வழக்கமாக கோடை பருவத்தில் இப்பகுதியில் பெரும்பாலும் நெல் சாகுபடி செய்யப்படுவதில்லை. காரணம், இங்கு கால்வாய் பாசனம் இல்லை. முழுக்க முழுக்க கிணற்றுப் பாசனம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட கிணறுகளில் இருக்கும் நீர் இருப்பை கருத்தில் கொண்டு கார் மற்றும் பிசான சாகுபடிகளில் இப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கைகொடுக்கும் கிணற்று நீர்

அந்த வகையில் கடந்த ஆண்டு இருபோக சாகுபடி நடைபெற்றிருந்தது. பிசான சாகுபடி அறுவடை பணிகள் கடந்த 2 மாதத்துக்குமுன் நிறைவடைந்திருந்தது. இதை தொடர்ந்து கோடை பருவத்தில் சாகுபடி பணிகளுக்கு விவசாயிகள் ஆயத்தமானார்கள். கடந்த தை மாதத்தில் இப்பகுதியில் பெய்த மழையால் கிணறுகளில் நீர் இருப்பு அதிகரித்தது. அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் உயரந்ததால் இவ்வாண்டு கோடையில் குறுகியகால நெல் சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் திட்டமிட்டு பணிகளை தொடங்கினர்.

கடந்த 3 வாரமாகவே இப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளாக இப்பகுதியில் நெல் சாகுபடி நடைபெறாத நிலையில் தற்போது கிணறுகளில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு நெல் சாகுபடியை நம்பிக்கையுடன் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயி வே. குமார் கூறும்போது, ‘‘இவ்வாண்டு தொடக்கத்தில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது. தற்போது 10 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. கிணறுகளிலும் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். வி.எம். சத்திரம் பகுதி கிராமங்கள், நொச்சிகுளம், ஆரோக்கியநாதபுரம், கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் சுமார் 400 ஏக்கரில் தற்போது நெல் சாகுபடி நடைபெறுகிறது.

பெரும்பாலும் அம்பை 16 ரகத்தையே விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பல இடங்களில் நாற்று நடவு தொடங்கியிருக்கிறது. வரும் ஜூன் மாதத்தில் பருவமழைக்குமுன் பயிர்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டுதான் 110 நாள் பயிர் ரகங்களை தேர்வு செய்துள்ளோம். வழக்கமாக கோடையில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 30 அடிக்கும்கீழே சென்றுவிடும். இவ்வாண்டு அவ்வாறில்லாமல் 10 அடியிலேயே தண்ணீர் கிடைக்கும் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் இருப்பதால் இம்முறை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இல்லாவிட்டால் பருத்தி சாகுபடியை பல விவசாயிகள் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

மனைகளாகும் விளைநிலங்கள்

பாளையங்கோட்டையின் விரிவாக்க பகுதியாக இருக்கும் வி.எம். சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகள் பெருகிவருகின்றன. இதனால் விளைநிலங்களும், தரிசாக பல ஆண்டுகளாக விடப்பட்ட நிலங்களும் வீட்டுமனைகளாகி வருகின்றன. இதனால் இப்பகுதியில் இருக்கும் குளங்களுக்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது. இப்பகுதியிலுள்ள தண்ணீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது.

நீர்வழித்தடங்களை மறித்து வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் பீர்க்கங்குளம், புளியங்குளம், பற்பகுளம், நொச்சிகுளம், பிராங்குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் தரிசாக காட்சியளிக்கின்றன. இந்த குளங்களில் நீர்பெருகினால் முப்போகம் விளைவிக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குளங்களில் சேதமடைந்துள்ள மடைகளை செப்பனிடவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x