Published : 30 May 2021 03:12 AM
Last Updated : 30 May 2021 03:12 AM
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு இன்று ஆய்வுசெய்ய வருகிறார். இதற்காக நேற்றுஇரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.
இன்றுகாலை 10 மணியளவில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு செய்கிறார்.
மேலும், அங்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் வசதியுடன் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை பார்வையிடுகிறார். இதையடுத்து மருத்துவமனையில் கரோனாநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் திருப்பூர் மாவட்டம் செல்கிறார். அங்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கோவையில் ஆய்வு
திருப்பூரில் ஆய்வை முடித்துவிட்டு கோவை வரும் முதல்வர், கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மதியம் 12.30 மணிக்கு செல்கிறார்.
அங்கு கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், வசதிகள் குறித்து கேட்டறிய உள்ளார். சுமார் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் இந்த ஆய்வு நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து, மாலை 4.40மணி முதல் 6 மணி வரை கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் கேட்டறிய உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT