Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM
தமிழகத்தில் கரோனா பரிசோதனையை தினசரி 3 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில்ஆட்சியர் கார்மேகத்தை சந்தித்துகரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர், டீன் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா பரவலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வேதனையளிக்கிறது. அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கினாலே உயிரிழப்பை தடுக்கலாம். மத்திய அரசிடம் பேசி கூடுதலாக ஆக்சிஜன் பெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பாக நான் கடிதம் மூலம் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.
கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாக தற்போது 3 நாட்கள் வரை ஆவதால் பாதிப்பு அதிகமாகிறது. நாங்கள் 24 மணி நேரத்தில் முடிவுகளை அறிவித்ததுபோல தற்போது அறிவிக்க வேண்டும். தினசரி கரோனா பரிசோதனையை 3 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.
ஊரடங்கில் மாற்றுத் திறனாளிகள், ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்க சமுதாய சமையலறை அமைத்து உணவு அளிக்கப்பட்டது. அதேபோல தற்போதும் வழங்கப்பட வேண்டும். அமைப்புச் சாரா தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு நிவாரண தொகை, விலையில்லா அரிசி, பருப்பு வழங்கினோம். இப்போதும் அதை தொடர வேண்டும்.
உயிரிழந்தவர்களை அப்படியே மீண்டும் வீட்டுக்கு எடுத்துச் சென்று பலமணி நேரம் வைத்திருந்து, இறுதி சடங்குகளை செய்த பின்னர் அடக்கம் செய்கின்றனர். இதுதொற்று பரவலை அதிகரிக்கச் செய்துவிடும். இதனைத் தடுக்க வேண்டும். தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை பெற வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு நான் ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறேன் என்றார். அதிமுக மாநிலங்களவை எம்பி சந்திரசேகரன், சேலம் மாவட்ட அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் அப்போது உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT