Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM
திருநெல்வேலியின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான பாளையங்கால்வாயின் படித்துறைகள் பாழாக்கப்பட்டு குப்பைகள், கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடிமாவட்டங்களில் தாமிரபரணிபாய்ந்தோடும் ஆற்றங்கரைகளிலும், அதையொட்டிய பல்வேறுகால்வாய்களிலும் நூற்றுக்கணக்கான படித்துறைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆற்றில் குளிப்பதற்கும், துணிகளை துவைக்கவும், நீச்சல் அடிக்கவும் இந்த படித்துறைகள் உதவியாக இருந்தன.
பாழாகும் படித்துறைகள்
நாளடைவில் படித்துறைகளை பராமரிக்க தவறியதால் அவை பாழடைந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதிலமடைந்துவிட்டன. சில இடங்களில் படித்துறைகளே தெரியாத அளவுக்குகுப்பைகளை கொட்டி மூடியிருக்கிறார்கள்.
இந்த பரிதாப காட்சிகளை பாளையங்கால்வாயில் பார்க்கலாம். தற்போது இக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில் கழிவுநீர் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாநகரில் இந்த கால்வாய் கடந்து செல்லும் பகுதிமுழுவதுமே பரிதாபகரமாக காட்சியளிக்கிறது.
கால்வாயின் படித்துறைகள் அனைத்தும் குப்பைகள் கொட்டும் பகுதிகளாக மாறியிருக்கின்றன. மேலப்பாளையத்தில் பாளையங்கால்வாயில் சாக்கடை நீர் கலப்பதால் மிகப்பெரிய கழிவுநீர் ஓடையாக மாறியுள்ளது. மேலும் கட்டிடக்கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் நீர்வழிப்பாதை அழியும் நிலையில் உள்ளது.
பாளையங்கால்வாயை ஒட்டியுள்ள சாலையில் செல்லும்போது சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை கால்வாயில் எவ்வித பொறுப்புணர்வும் இல்லாமல் மக்கள் கொட்டி வருவது குறித்து இயற்கைஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
பாளையங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட பலருக்கும் பாளையங்கால்வாய் படித்துறை பகுதிதான் நீச்சல் கற்கும் களமாக இருந்தது. இப்பகுதி மக்கள், கால்வாய்தண்ணீரை குடங்களில் எடுத்துச்சென்று குடிநீராகப் பயன்படுத்திய காலங்களும் உண்டு. இப்போது கால்வாய் தண்ணீரில் கால்வைத்தாலே நோய் வந்துவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு கால்வாய் ளும், அதன் படித்துறைகளும் குப்பைகள், கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றப்பட்டிருக்கின்றன.
விரயமாக்கப்படும் பணம்
கால்வாயை தூர்வாரி செப்பனிடும் பணிகளும் அவ்வப்போது நடைபெறுகின்றன. ஆனாலும் மக்கள் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கழிவுகளையும், குப்பைகளையும், கட்டிட இடிபாடுகளையும் கால்வாய்க்குள் கொட்டி வருகிறார்கள். கால்வாயை தூர்வாரும்போது கழிவுகளை வாரி கரையில் வைப்பதும், மழைவந்தால் மீண்டும் அந்த கழிவுகள் கால்வாய்க்குள் சேருவதுமாக பணம் விரயமாக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் பாரம்பரிய மிக்க பாளையங்கால்வாய் பாழாகிவரும் விவகாரத்தில் அரசுத்துறைகளும், பொதுமக்களும் பொறுப்புடனும், அக்கறையுடனும் செயல்படாவிட்டால் வருங்காலத்தில் இது நிரந்தரமாக கழிவுநீர் கால்வாயாகவும், குப்பைகள் கொட்டும் பகுதியாகவும் மாறும்அபாயம் இருப்பதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT