Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM
திருநெல்வேலி பேட்டையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் தலைமறைவாக உள்ளார். பாதிக்கப் பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
திருநெல்வேலியை அடுத்த, பேட்டை புனித அந்தோணியார் ஆலய பாதிரியாராக, தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்த செல்வன் (34), 2010-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இந்த ஆலயத்தையொட்டி இருக்கும் பள்ளியின் பொறுப்பாளராகவும் அவர் இருந்தார். பாதிரியார் தங்குவதற்கு ஆலயம் அருகே வீடு இருக்கிறது.
அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள், ஆலய பாடகர் குழுவில் இடம்பெற்றிருந்தார். அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியை, பாதிரியார் செல்வன் பாலியல் பலாத்காரம் செய்ததில், மாணவி கருத்தரித்தார். ஆரம்பத்தில் மாணவிக்கு இது புரியவில்லை. அவரது உடல் மாற்றத்தைக் கண்டு, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். இதில், மாணவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியிடம் கேட்டபோது, பாதிரியார் செல்வன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததைத் தெரிவித்தார்.
கருக்கலைப்பு
ஆத்திரமடைந்த அவர்கள், பாதிரியார் செல்வனிடம் கேட்டபோது, கருவைக் கலைத்துவிடுமாறும், அதற்கு உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலி டவுனில் பெண் மருத்துவர் ஒருவரிடம் அம்மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஒரு வாரம் தங்க வைக்கப்பட்டு கருக்கலைப்பு செய்யப்பட்டது. 5 மாத கருவை, பாலித்தீன் பையில் எடுத்து வந்து, ஆலய கல்லறைத் தோட்டத்தில் புதைத்துள்ளனர்.
இந்த விவரம், ஆலயத்துக்கு உள்பட்ட பங்கு மக்களுக்கு தெரியவந்ததை அடுத்து, போலீஸில் புகார் செய்யப்பட்டது. திருநெல்வேலி மகளிர் இன்ஸ்பெக்டர் விமலா உள்ளிட்ட போலீஸார் விசாரித்ததில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்தது, கருக்கலைப்பு செய்தது உண்மை என்பது தெரியவந்தது.
பாதிரியார் செல்வன், கருக்கலைப்பு செய்த டாக்டர் ஆகியோர் மீது புதன்கிழமை வழக்கு பதிவு செய்யப் பட்டது. பாதிரியார் தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட 5 மாத சிசுவை தோண்டி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். பாதிரியார் பிடிபட்டதும், அவருக்கு மரபணு சோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆயர் இல்லம் வருத்தம்
இதுதொடர்பாக பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் இல்ல வட்டாரத்தில் விசாரித்தபோது, பாலியல் பலாத்காரத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. அதிலும், கருக்கலைப்பு என்பது திருச்சபை சட்டப்படி கடுமையான குற்றமாகும். இக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பாதிரியாருக்கான தகுதியை, செல்வன் இழந்துவிடுவார். இது தொடர்பான ஆவணங்களும், ரோமிலுள்ள திருச்சபையின் தலைமையிடத்துக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT